ஜூன் 13 வரை 135 நாட்கள் தண்ணீர் திறக்க ஏற்பாடு | Thirumurthy Dam Opened | Udumalpet
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி அணையில் இருந்து பி.ஏ.பி. நான்கு மண்டல பாசனத்துக்கு சுழற்சி முறையில் தண்ணீர் திறக்கப்படுகிறது. இரண்டாம் மண்டல பாசனம் கடந்த ஜனவரி 4ல் நிறைவு பெற்றது. தொடர்ந்து மூன்றாம் மண்டல பாசனத்துக்கு அணையிலிருந்து பிரதான கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த மண்டல பாசனத்தில் கோவை, திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட 94 ஆயிரத்து 362 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். அணை நீரை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார். அணை நீர் மட்டம் 60 அடி. தற்போது 52.62 அடியாக நீர்மட்டம் உள்ளது. முதற்கட்டமாக அணையில் இருந்து வினாடிக்கு 250 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. அணை நீர் இருப்பை தொடர்ந்து 135 நாட்களுக்கு மொத்தம் 10 ஆயிரத்து 300 மில்லியன் கன அடி நீர் திறந்து விட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் அமைச்சர் கயல்விழி, கலெக்டர் கிருஸ்துராஜ், பொதுப்பணித்துறை அதிகாரிகள், பாசன சபை நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.