விலை வீழ்ச்சியால் விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் | Tomato Prices fall | Farmers are Worried | Palladam
விலை வீழ்ச்சியால் விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் / Tomato Prices fall / Farmers are Worried / Palladam தமிழகத்தில் சமீப காலமாக தக்காளி விலை படிப்படியாக குறைந்து வருகிறது. கிலோ 10 ரூபாய்க்கும் குறைவாக கொள்முதல் செய்கின்றனர். இதனால் விவசாயிகள் விற்பனைக்கு எடுத்துச் செல்லாமல் விளை நிலங்களிலேயே தக்காளி பழங்களை அழிப்பதும், ரோட்டில் வீசுவதுமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பல்லடம் அருகே போதிய விலை கிடைக்காததால் செடிகளுடன் தக்காளிப் பழங்கள் ரோட்டில் வீசப்பட்டன. பறிப்பு கூலி கூட கிடைக்காததால் தக்காளி விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த மாதப்பூர் தொட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்தி. எம்பிஏ பட்டதாரியான இவர் விவசாயத்தின் மீது ஆர்வம் கொண்டு முழு நேர விவசாயம் செய்து வருகிறார். விளை பொருட்களுக்கு ஆதார விலை கிடைப்பதில்லை என்பதால் விவசாயிகள் கடும் நஷ்டம் அடைந்து வருவதாக விவசாயி கார்த்தி வேதனை தெரிவித்தார். சில மாதங்களுக்கு முன் தக்காளிக்கு நல்ல விலை கிடைத்தது. அதனால் இரண்டு ஏக்கரில் கார்த்தி தக்காளி சாகுபடி செய்தார். தற்போது தக்காளி விலை வீழ்ச்சியடைந்துள்ளது. கிலோ 10 ரூபாய்க்கும் குறைவாக கேட்பதால் பறிப்பு கூலி கூட கிடைக்கவில்லை. இதனால் நன்றாக உள்ள சில தக்காளிகளை மட்டும் பறித்துவிட்டு மீதமுள்ளவற்றை செடிகளுடன் பறித்து ரோட்டோரம் வீச வேண்டிய சூழல் ஏற்பட்டதாக வேதனை தெரிவித்தார். நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் தக்காளி உள்ளிட்ட விளை பொருட்களை அதிகளவில் தாக்காளி சாகுபடி செய்கின்றனர். ஆனால் வியாபாரிகள் சிலர் வெளிமாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தக்காளிகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்கின்றனர். இதனால் தமிழக விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைக்கு இணங்க விளை பொருட்களுக்கு ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும். தக்காளி மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் தொழிற்சாலைகளை துவங்கி தமிழக அரசே இவற்றை விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.