பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு | Tribal people protest| Pandalur
பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு | Tribal people protest| Pandalur பந்தலூர் சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட புஞ்சைக்கொல்லி பகுதியில் காட்டுநாயக்கர் பழங்குடியினர் வசித்து வருகின்றனர். பழங்குடியினர் வீடுகள் பழுதடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. புதிய வீடுகள் கட்டித்தர வேண்டி தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது. இது தொடர்பான தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக பழங்குடியினர் நலத்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் ஏழு குடும்பங்களுக்கு வீடு கட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்காக குழிவயல் பகுதியில் வருவாய் துறைக்கு சொந்தமான நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. நிலத்தில் இருந்த எட்டு பெரிய மரங்களை வெட்டுவதற்கு வருவாய் துறை அனுமதி வழங்கியது. நிலத்தை சீரமைக்கும் பணியில் பழங்குடியினர் ஈடுபட்டனர் . அப்போது வனத்துறை அதிகாரிகள் மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பணியை நிறுத்தினர். இதைக் கண்டித்து எம். எல். ஏ. பொன் ஜெயசீலன் தலைமையில், குழிவயல் சாலையில் பழங்குடியினர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 2 மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் வனச்சரகர் அய்யனார், போலீஸ் எஸ்ஐ வெற்றிச்செல்வன், வருவாய் ஆய்வாளர் கவுரி, வி.ஏ.ஓ. ஷீஜா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பெரிய மரங்களை வெட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், சிறிய மரங்களை வெட்டுவதற்கும் இனி எந்த தடையும் இருக்காது என வனத்துறை உறுதியளித்தது. இதையடுத்து மறியல் கைவிடப்பட்டு நிலத்தை சீரமைக்கும் பணியில் பழங்குடியினர் மீண்டும் ஈடுபட்டனர்.