உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / உடுமலை வனத்துறையினர் அடித்து கொன்றதாக பழங்குடியினர் குற்றச்சாட்டு

உடுமலை வனத்துறையினர் அடித்து கொன்றதாக பழங்குடியினர் குற்றச்சாட்டு

உடுமலை வனத்துறையினர் அடித்து கொன்றதாக பழங்குடியினர் குற்றச்சாட்டு / mystery surrounds death of tribal worker / tribals protest / udumalpet திருப்பூர் வனக்கோட்டம் உடுமலை வனச்சரகம் மேல்குருமலை மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்தவர் மாரிமுத்து, வயது 53. இவர் மூன்று ஆண்டுகளாக மனைவி பாண்டியம்மாள், மகள்கள் சிந்து,  ராதிகாவுடன் கேரளா மாநிலம் மூணாறு செண்பகத்தொழு குடியில் வசித்து வந்துள்ளார். கஞ்சா பயிரிட்டதாக ஏழு ஆண்டுக்கு முன் உடுமலை வனத்துறையினர் பதிவு செய்த வழக்கில் கடந்த ஜூன் 29ம் தேதி மாரிமுத்து உள்ளிட்ட 7 பேர் குற்றமற்றவர்கள் என உடுமலை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நேற்று முன்தினம் உடுமலை வந்து விட்டு மூணாறுக்கு அரசு பஸ்சில் மாரிமுத்து சென்று கொண்டிருந்தார். உடுமலை அருகே பஸ்சில் ஏறிய கேரளா சின்னாறு கலால் மற்றும் வணிக வரித்துறையினர் மாரிமுத்துவை சோதனை செய்தனர். அவர் ஒரு புலிப்பல் வைத்திருந்ததாக கூறி பஸ்சில் இருந்து இறக்கி சின்னாறு வனத்துறையினரிடம் ஒப்படைத்து விட்டு சென்றனர். தமிழகத்தை சேர்ந்தவர் என்பதால் உடுமலை வனச்சரகர் வாசு, அமராவதி வனச்சரகர் புகழேந்தி நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு கேரளா  வனத்துறை அலுவலகத்திலிருந்து உடுமலைக்கு மாரிமுத்துவை அழைத்து வந்தனர். இரவு உடுமலை வனச்சரக அலுவலகத்தில் வைத்து விசாரித்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 4:30 மணிக்கு, சிறுநீர் கழிப்பதாக கூறிச்சென்ற மாரிமுத்து, அங்கிருந்த குளியல் அறையில் துாக்கு மாட்டி இறந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர். வனத்துறை அலுவலகத்தில் பழங்குடியினத்தை சேர்ந்தவர் அடித்துக் கொல்லப்பட்டதாக தகவல் பரவி, மலைவாழ் மக்கள் சங்கத்தினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பழங்குடியினர் மீதான வன் கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும், அதுவரை சடலத்தை எடுக்கக்கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டனர். உடுமலை, அமராவதி வனச்சரகத்திலுள்ள மலைவாழ் மக்கள் மற்றும் கேரளா மாநிலத்திலுள்ள மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்த, நுாற்றுக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். திருப்பூர் ஏ.டி.எஸ்.பி., ராஜேந்திரன், டி.எஸ்.பி., நமச்சிவாயம், ஆர்.டி.ஓ. குமார் மற்றும் அதிகாரிகள் பேச்சு நடத்தினர். உறவினர், மலைவாழ் மக்கள் கொடுக்கும் புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்படும் என உறுதியளித்தனர். அதைத் தொடர்ந்து இன்று மாலை 3 மணிக்கு, வனத்துறை அலுவலகத்திலிருந்து சடலம் மீட்கப்பட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து 11 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது.

ஆக 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ