யானை - மனித மோதல் தடுக்க வலியுறுத்தல் | wildlife nuisance | struggle to prevent | wayanad
தமிழக எல்லை பகுதியான நீலகிரி மாவட்டத்தை ஒட்டி உள்ளது கேரளா மாநிலம் வயநாடு. இந்தப் பகுதி முதுமலை, முத்தங்கா, பந்திப்பூர் ஆகிய வனவிலங்குகள் நிறைந்துள்ள வனப்பகுதிகள் சந்திக்கும் பகுதியாக உள்ளது. இதனால் தினசரி வனவிலங்குகள் தொல்லை அதிகரித்து வருகிறது. வயநாடு பகுதிக்கு உட்பட்ட மானந்தவாடி, மீனங்காடி, சுல்தான் பத்தேரி, சீரால், மேப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் புலிகள் அதிக அளவில் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் முகாமிடுகின்றன. வளர்ப்பு கால்நடைகளை வேட்டையாடும் புலிகள், தொடர்ந்து எதிரில் தென்படும் மனிதர்களையும் வேட்டையாடி வருகிறது. அத்துடன் யானை மனித மோதலும் அதிகரித்து, மக்கள் வெளியில் நடமாட முடியாத நிலையில் சிரமப்பட்டு வருகின்றனர். வயநாடு சுற்றுவட்டார பகுதிகளில் தொடரும் வனவிலங்குகள் - மனித மோதலை தடுக்க தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் வயநாடு மாவட்டத்தில் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை போராட்டம் நடைபெற்ற நிலையில், காலையில் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு லக்கடி, வைத்திரி, கல்பெட்டா, சுல்தான் பத்தேரி பகுதிகளில் வாகனங்களை தடுத்து நிறுத்தினர். அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர். தொடர்ந்து ஒரு சில அரசு பஸ்கள் மற்றும் தனியார் வாகனங்கள் இயக்கப்பட்டன. எனினும் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. முக்கிய கடை வீதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது. நீலகிரி மாவட்ட எல்லையை ஒட்டிய வயநாடு பகுதியில் வனவிலங்கு தொல்லை அதிகரித்து வரும் நிலையில், எல்லையோர வனப்பகுதிகள் மற்றும் மக்கள் குடியிருப்பு பகுதிகளில், தமிழக வனத்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிர படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.