கலவர பூமியாக மாறிய பென்னாகரம் | Bhoomi Puja at the entrance gate | dmk - pmk clash | Pennakaram
தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் புதிதாக பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதன் இரண்டு நுழைவாயில்களிலும் நுழைவாயில் தூண்கள் மற்றும் நிழற்குடை அமைக்க பென்னாகரம் எம்எல்ஏ மேம்பாட்டு நிதியிலிருந்து 39 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பூமி பூஜை போடுவதற்காக திமுகவினர் பென்னாகரம் பேருந்து நிலையத்தில் வண்ண பலூன்களை கட்டி விழா ஏற்பாடுகளை செய்தனர். பூமி பூஜை செய்ய திமுக எம்பி மணி வருவதாக தகவல் வெளியானது. பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வழங்கிய பணிகளுக்கு திமுக எம்பி பூமி பூஜை செய்ய வருவதாக தகவல் வெளியானதால் பாமகவினர் டென்ஷன் ஆகினர். தொடர்ந்து பேருந்து நிலையத்தில் குவிந்தனர். பூமி பூஜை செய்வதற்கான பணிகள் தயாராக இருந்த நிலையில் திமுகவினருக்கும் பாமகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளுவில் முடிந்தது. காவல் துறையினர் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். தொடர்ந்து பூமி பூஜை நிறுத்தப்பட்டதால் திமுகவினர் கலைந்து சென்றனர். அடிக்கல் நாட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட கற்கள் உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்த வலியுறுத்தி பாமகவினர் பேருந்து நிலையம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பேருந்து நிலையத்தில் புதிய பணிகள் தொடங்குவதற்கான விதிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்ததால் பாமகவினர் கலைந்து சென்றனர்.