11 பேர் உயிரை காவு வாங்கிய கொடைக்கானல் அஞ்சுவீடு பேய் அருவி | Devil fall | Kodaikanal
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலை கிராமமான பேத்துப்பாறை அருகே அஞ்சுவீடு என்ற பகுதி அமைந்துள்ளது. வன விலங்குகள் நடமாட்டம் மிகுந்த அடர்ந்த காட்டுக்குள் அஞ்சுவீடு அருவி உள்ளது. வால்பாறை அருகே உள்ள அதிரப்பள்ளி அருவி போல் ஆபத்தானது இந்த அஞ்சுவீடு அருவி. மலை உச்சியில் இருந்து அதல பாதாளத்தின் கீழே அருவியில் இருந்து காட்டாறு வெள்ளம் கொட்டுகிறது. பார்க்கவே பிரம்மிப்பாக இருக்கும் இந்த அருவியில் குளிப்பது மிகவும் ஆபத்தானது. தகுந்த பாதுகாப்பு ஏற்பாட்டுடன் அருவியில் குளிக்க செல்லும்படி வனத்துறை எச்சரிக்கை விடுக்கிறது. எனினும் ஆபத்தை உணராத இளைஞர்கள் அருவியின் ஆழம் தெரியாமல் வழுக்கி விழுந்தும், நீரின் சுழற்சியில் சிக்கியும் உயிர் பலியாவது தொடர்கிறது. இந்த அருவிக்கு நேற்று மாலை பொள்ளாச்சியில் இருந்து 11 நண்பர்கள் குளிக்க சென்றனர். அப்போது பொள்ளாச்சியை சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர் நந்தகுமார் வயது 21 நீரில் மூழ்கினார். நீண்ட நேரமாகியும் நந்தகுமார் அருவியில் இருந்து வெளியே வராததால் நண்பர்கள் சந்தேகம் அடைந்தனர். அருவிக்குள் சென்று தேடினர். பல மணி நேரம் தேடியும் நந்தகுமாரை காணவில்லை. ஸ்பாட்டுக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் உடலை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். இரவு நேரம் மற்றும் அருவியில் நீர் பெருக்கெடுத்ததால் உடலை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. தொடர்ந்து இன்று இண்டாவது நாளாக நடுங்கும் குளிரில் தீயணைப்பு வீரர்கள் பாதாள கரண்டிகளை அருவிக்குள் செலுத்தி உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். மருத்துவ மாணவர் நந்தகுமார் பலியான சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மிகவும் ஆபத்தான இந்த அருவியில் இதுவரை 11 பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது. உயிர்களை காவு வாங்கும் அஞ்சுவீடு அருவியை பலர் பேய் அருவி என அழைக்கத் தொடங்கியுள்ளனர். கடந்த முறை பள்ளி மாணவன் ஒருவன் நண்பர்களுடன் சேர்ந்து குளிக்கும்போது இறுதியாக எடுக்கப்பட்ட வீடியோ வைரலானது. அதைத் தொடர்ந்து அஞ்சுவீடு பகுதிக்கு செல்லக்கூடிய பகுதியில் பாதுகாப்பு கம்பிகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. எனினும் வனத்துறை தற்போது வரை பாதுகாப்பு கம்பிகள் அமைக்கவில்லை. இதனால் அருவியில் அடிக்கடி உயிரிழப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.