தனியார் நிலத்தை விலைக்கு வாங்கி மாநகராட்சிக்கு கொடுத்த அதிமுக கவுன்சிலருக்கு குவியும் பாராட்டு | Hosur Corporation | Solution to sewage problem
ஓசூர் மாநகராட்சி ஜூஜூவாடி 2 வது வார்டு மாருதி நகர், பிடிஆர் நகர், நேதாஜி நகர் குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் கட்ட தனியார் நிலம் தேவைப்பட்டது. தனியாரிடம் அணுகியபோது அவர் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் 30 ஆண்டுகளாக தெருக்களில் கழிவு நீர் தேங்கி குடியிருப்புவாசிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வந்தனர். கடந்த உள்ளாட்சி தேர்தலில் 2வது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஸ்ரீதர் தான் வெற்றி பெற்றால் கழிவு நீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பேன் என வாக்குறுதி கொடுத்தார். வெற்றி பெற்று ஸ்ரீதர் கவுன்சிலர் ஆனார். வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு கழிவு நீர் கால்வாய் கட்டுவதற்காக தனியாரிடம் 50 சென்ட் நிலத்தை பல லட்சம் ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கி மாநகராட்சியிடம் ஒப்படைத்தார். மேலும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கழிவு நீர் கால்வாய் கட்ட 40 லட்சம் ரூபாய் செலவில் தனது பங்காக 20 லட்சம் ரூபாய்க்கான காசோலையை மேயர் சத்யாவிடம் கவுன்சிலர் ஸ்ரீதர் வழங்கினார். மேயர் நன்றி தெரிவித்து கால்வாய் கட்ட உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். 30 ஆண்டுகளாக நிலவிய கழிவு நீர் கால்வாய் பிரச்சனைக்கு தீர்வு காண உதவிய கவுன்சிலர் ஸ்ரீதருக்கு வார்டு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.