சிறுமியை திருமணம் செய்த கணவர் கைது | child marriage | plus 2 student dies | Krishnagiri
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தட்டசந்திரம் கிராமத்தை சேர்ந்த அஜித் வயது 26. கூலி தொழிலாளி. இவருக்கு கடந்த பிப்ரவரி 21ம்தேதி திருமணம் நடந்தது. ப்ளஸ் 2 படித்து வந்த 17 வயது மாணவி தான் மணமகள். மாணவியின் பெற்றோர் கூலி வேலைக்கு சென்று விடுவதால் மகளை பராமரிக்க முடியவில்லை. இதனால் 17 வயதிலேயே அஜீத்துக்கு திருமணம் செய்து கொடுத்தனர். மாணவிக்கு திருமணத்தில் விருப்பமில்லை. பெற்றோரிடம் கெஞ்சி பார்த்தார். அவர்கள் கேட்கவில்லை. திருமணமாகி புகுந்த வீட்டுக்கு சென்றதும் தன்னை ப்ளஸ் 2 தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என கணவன் அஜீத்திடம் கேட்டு அழுதார். கணவர் ஒத்துக் கொண்டதால் ப்ளஸ் 2 தேர்வு எழுதினார். தான் மேற்கொண்டு கல்லூரிக்கு சென்று படிக்க விரும்புவதாக மாணவி கூறினார். இதற்கு மாமனார், மாமியார் உள்ளிட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மாணவி மனமுடைந்து காணப்பட்டார். இந்த விஷயத்தில் மாணவிக்கும் அஜீத்துக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. மாணவியை மாமனார், மாமியார் உள்ளிட்டோர் திட்டினர். இதனால் மாணவி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டார். ஆபத்தான நிலையில் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பிடலில் கணவன் வீட்டார் அட்மிட் செய்தனர். அங்கு மாணவி இறந்தார். VAO லோகநாதன் கெலமங்கலம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தியபோது மாணவியை கட்டாயப்படுத்தி இரு வீட்டாரும் திருமணம் செய்து வைத்தது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து குழந்தை திருமணம் செய்ததாக அஜித்தை போலீசார் கைது செய்தனர். குழந்தை திருமணத்துக்கு காரணமான அஜீத்தின் பெற்றோர் உள்ளிட்ட சில உறவினர்களிடம் விசாரணை நடக்கிறது. வரதட்சணை கேட்டு மாணவி கொடுமைப்படுத்தப்பட்டாரா என ஓசூர் துணை கலெக்டர் பிரியங்கா தனியாக விசாரணை நடத்தி வருகிறார். குழந்தை திருமணத்தால் மனமுடைந்து மாணவி தற்கொலை செய்த சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.