பிலிக்குண்டுலுவில் நீர் வரத்து அதிகரிப்பு | Increase in water flow in the Hogenakkal
காவிரி கரையோரங்களில் சில தினங்களாக தொடர் கன மழை பெய்து வருவதால் ஒகேனக்கல் காவேரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளது. இந்நிலையில் தமிழக எல்லைப் பகுதியான பிலிக்குண்டுலுவில் நேற்றைய நிலவரப்படி வினாடிக்கு 6,300 கன அடியாக குறைந்தது. நேற்றிரவு காவேரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 14 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவேரி ஆற்றில் உள்ள ஐந்தருவி, சினி அருவி, மெயின் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. எனினும் அருவிகளில் குளிக்கவும், படகு சவாரி செல்லவும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளித்தும், படகு சவாரி சென்றும் மகிழ்ச்சியடைந்தனர்.