பஸ் டாப்பில் சிக்கி அறுந்த மின் ஒயரால் ஒரு உயிரே போச்சு | Public Protest | Krishnagiri
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் இருந்து பெட்டமுகிலாளம் மலை கிராமத்துக்கு அரசு பஸ் சென்றது. தல்சூர் கிராமத்தில் பஸ் சென்ற போது, எதிர்பாராதவிதமாக பஸ்சின் மேல் பகுதி மின் ஒயரில் உரசியது. இதில் ஒயர் அறுந்து ரோட்டில் விழுந்தது. அதே ஊரை சேர்ந்த 48 வயதான ரத்தினம்மா என்பவர் மின் வயரில் மிதித்தார். அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. அலறி துடித்த ரத்தினம்மாவை காப்பாற்ற முரளி, லோகநாதன் என்ற இளைஞர்கள் ஓடி வந்தனர். அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. படுகாயம் அடைந்த 3 பேரையும் அப்பகுதி மக்கள் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலன் இன்றி ரத்தினம்மா இறந்தார். முரளி, லோகநாதன் சிகிச்சையில் உள்ளனர். ரத்தினம்மா மரணத்துக்கு நீதி கேட்டும் நிவாரணம் வழங்க கோரியும் தல்சூர் கிராம ரோட்டில் உறவினர், மக்கள் மறியல் செய்தனர். தேன்கனிக்கோட்டை தாசில்தார், போலீசார், மின் வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். உயிரிழந்த ரத்தினம்மா குடும்பத்தில் ஒருவருக்கு மின்வாரியத்தில் தற்காலிக வேலை வழங்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.