உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கிருஷ்ணகிரி / புட்டு, புட்டு வைக்கும் போலீஸ் | Krishnagiri case | Fake NCC Camps | Sivaraman Accused

புட்டு, புட்டு வைக்கும் போலீஸ் | Krishnagiri case | Fake NCC Camps | Sivaraman Accused

கிருஷ்ணகிரி கந்திகுப்பம் தனியார் பள்ளியில் இரு வாரங்களுக்கு முன் நடத்தப்பட்ட போலி என்சிசி முகாமில் 12 வயது மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் போலி பயிற்சியாளரும், நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியுமான சிவராமனை பர்கூர் போலீசார் கைது செய்தனர். இவர் தவிர ஐந்து பயிற்சியாளர்கள், குற்றத்தை மறைக்க முயன்ற பள்ளி நிர்வாகத்தினர் 4 பேர் உட்பட 11 பேர் கைதாகினர். மேலும் சில தனியார் பள்ளிகளில் இதே போல் சிவராமன் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாகவும் புகார் எழுந்தது. சிவராமன் கைதான விவரம் அறிந்து மற்றொரு மாணவி அளித்த புகாரில் சிவராமன் மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு நேற்று பதிவானது. இதுதவிர 36 லட்சம் ரூபாய் பண மோசடி செய்ததாகவும் அவர் மீது புகார்கள் குவிந்தன. இந்த சூழலில் அவர் கைதாவதற்கு முன் நடந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது; சிவராமன் தன் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் ஜூலை 11ல் எலி பேஸ்ட் தின்று தற்கொலைக்கு முயன்று மருத்துவ சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார். பின் பாலியல் பலாத்கார வழக்கில் தான் கைதாக போகிறோம் என்ற பயத்தில் கைதாவதற்கு ஒரு நாள் முன் மீண்டும் எலி பேஸ்ட் தின்று தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். கைது செய்து அழைத்து வரும்போது தப்பியோட முயன்றதில் அவரது கால் முறிந்தது. விசாரணையின் போது சிவராமனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. எலி பேஸ்ட் தின்றதை சொன்னார். மருத்துவ பரிசோதனையில் சிவராமன் சொன்னது உண்மை என தெரிந்தது. மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என கூறி இருந்தனர். ஐசியுவில் இருந்த சிவராமன் இன்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். அடுத்த சம்பவமாக சிவராமனின் தந்தையும் நேற்று இரவு இறந்துள்ளார். சிவராமனின் தந்தை அசோக்குமார் வயது 61. நேற்று இரவு 11.30 மணி அளவில் மது போதையில் பைக்கில் சென்ற இவர் எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். முன்னதாக இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் இருந்தால், கிருஷ்ணகிரி கலெக்டர் ஆபீஸ் பின்புறம் உள்ள அரசு விடுதியில் இரவு 7 மணிக்கு மேல் வந்து புகார் தெரிவிக்கலாம். அவர்களது பெயர், விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். அச்சமின்றி புகார் தெரிவிக்கலாம் என கூறப்பட்டு இருந்தது. வழக்கின் முக்கிய குற்றவாளி இறந்ததால் விசாரணை அடுத்தகட்டமாக எப்படி நகரும் என கேள்வி எழுந்துள்ளது.

ஆக 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !