அமைச்சரிடம் சந்தித்து கோரிக்கை வைத்தும் கண்டுகொள்ளவில்லை என வேதனை
அமைச்சரிடம் சந்தித்து கோரிக்கை வைத்தும் கண்டுகொள்ளவில்லை என வேதனை / Madurai / Aavins milk supply protest மதுரை ஆவினுக்கு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் மூலம் தினமும் 1.50 லட்சம் லிட்டர் பால் சப்ளை செய்யப்படுகிறது. அரசு வழங்கும் லிட்டருக்கு 3 ரூபாய் ஊக்கத்தொகை உட்பட பாலுக்கான முழு தொகையை சங்கங்களின் வங்கி கணக்கில் வரவு வைத்து பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்தாண்டு ஜனவரி முதல் ஊக்கத்தொகை 3 ரூபாயை சங்கங்களின் வங்கி கணக்கிற்கு வரவு வைக்காமல் நேரடியாக விவசாயிகளுக்கு வழங்க ஆவின் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை மாவட்ட ஆவின் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆவின் பொது மேலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படாததால் பிப்ரவரி 24 ம் தேதி முதல் பால் நிறுத்தப் போராட்டம் அறிவித்தனர். அதைத் தொடர்ந்து மீண்டும் மதுரை ஆவின் பொது மேலாளருடன் பால் உற்பத்தியாளர்கள் நல சங்கம் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினர். புதிய கமிஷனருடன் ஆலோசித்து பின் முடிவு அறிவிப்பதாக தெரிவித்ததால் மார்ச் 11ம் தேதி வரை பால் அனுப்பும் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. இன்று மதுரை ஆவின் பொதுமேலாளரிடம் பேச்சுவார்த்தை நடத்த பால் உற்பத்தியாளர்கள் சங்க மற்றும் பால் உற்பத்தியாளர் நலச்சங்க நிர்வாகிகள் வந்த போது ஆவின் பொதுமேலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பினர். அதிகாரிகள் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை தவிர்ப்பதற்காகவே அலுவலகத்திற்கு வரவில்லை எனக்கூறி ஏற்கனவே திட்டமிட்ட படி வரும் 11 ம் தேதி முதல் ஆவினுக்கு பால் நிறுத்தும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்தனர்.