டிசம்பர் 11 முதல் காலவரையற்ற ஸ்டிரைக் அறிவிப்பு | Madurai | Airport expansion issue
மதுரை விமான நிலையம் 633.17 ஏக்கரில் விரிவாக்கம் செய்ய சின்ன உடைப்பு, பரம்புபட்டி உள்ளிட்ட கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. சின்ன உடைப்பு கிராமத்தில் கடந்த 2009 ம் ஆண்டு நில மதிப்பீடு கணக்கிடப்பட்டு கடந்த 2022 ம் ஆண்டு பயனாளிகளுக்கு நிதி வழங்கப்பட்டது. இழப்பீடு தொகை குறைவாக இருப்பதாக மக்கள் குற்றம் சுமத்தினர். எனவே 2013 நில எடுப்பு சட்டப்படி கணக்கிட்டு இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என போராடினர். வீடுகளை இழந்த தங்களுக்கு 3 சென்ட் இடம் ஒதுக்கீடு செய்து வீடுகள் கட்டி தரவேண்டும். அதுவரை வீடுகளை காலி செய்ய மாட்டோம் என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த நவம்பர் 20 ம் தேதி கிராமத்தினர் ஐகோர்ட் மதுரை கிளையில் முறையிட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிலங்களை கையகப்படுத்த இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தனர். இதனால் போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது. வரும் 11ம் தேதி வழக்கு விசாரணை வரவுள்ள நிலையில் நாளை முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட சின்ன உடைப்பு கிராம மக்கள் தீர்மானித்தனர். அதைத் தொடர்ந்து சின்னஉடைப்பு கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.