இது ஒரு மரபு ஓவியக் கலைப் பயணம் | Andril Heritage Art Gallery | V.S.Chellam Century Hall | Madurai
இது ஒரு மரபு ஓவியக் கலைப் பயணம் / Andril Heritage Art Gallery / V.S.Chellam Century Hall / Madurai மதுரை மாநகரமானது தமிழகத்தின் கலை மற்றும் கலாச்சாரத்திற்கான தலைநகரமாக உள்ளது. மதுரைக்கு 2500 ஆண்டுகளாக தொடர்ச்சியான கலைப் பாரம்பரியம் இருப்பது குறிப்பிடத்தக்கது. மதுரையில் ஓவியக் கலைஞர்களுக்கென சித்திரக்கார வீதி என்று தனி வீதி இருப்பது இதன் சிறப்பாகும். இந்தக் கலைப் பாரம்பரியத்தைப் போற்றும் விதமாக அன்றில் சித்திரக் கூடம் மதுரையில் துவக்கப்பட்டுள்ளது. மதுரை காமராஜர் சாலை வி.எஸ். செல்லம் நுாற்றாண்டு ஹாலில் இந்த அன்றில் சித்திரக் கூடம் திறப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதை தியாகராஜர் கல்லுாரி துணை முதல்வர் டாக்டர் உமா கண்ணன் துவக்கி வைத்தார். அன்றில் சித்திரக் கூடம் நிறுவனர் ராஜேஷ் கண்ணா வரவேற்றார். இதில் ஏராளமான ஓவியர்களின் படைப்புகள் இடம் பெற்றுள்ளன. அன்றில் எனும் பறவையானது காதலின் சின்னமாக சங்க இலக்கியங்களிலேயே குறிப்பிடப்பட்டுள்ளமையால் இச்சித்திரக்கூடத்திற்கு இப்பறவையின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதல்முறையாக மரபு ஓவியத்திற்கென்று இந்த சித்திரக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும். இயற்கை மரபு, திருவிழாக்கள், கட்டிடக் கலைகள், நாட்டுப்புறக் கலைகள், காவியங்கள், கதைகள், கைவினைக் கலைகள், வரலாற்றுக் கதை மாந்தர்கள் உள்ளிட்ட நமது கலாச்சாரத்தின் அடையாளமாக விளங்கும் கூறுகளுக்கான முக்கியத்துவத்தை முன்னிறுத்த மற்றும் நம் கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களை ஓவியக் கலையின் வழியே உணர வழிவகை செய்கிறது. தென்தமிழகத்திலுள்ள ஓவியர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடனும், ஓவியர்கள் தங்கள் ஓவியங்களை விற்பனை செய்து கொள்வதற்கான களத்தை பயன்படுத்திக் கொள்ளும் நோக்கத்திலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த அன்றில் சித்திரக் கூடம் நிரந்தரமான கலைக்கூடமாக செயல்படும். தவிர ஓவியக் கண்காட்சியும் நடக்கிறது. தினமும் காலை 10.30 முதல் இரவு 8.30 மணி வரை கண்காட்சி நடைபெறும். நாளை நிறைவடைகிறது. அனுமதி இலவசம்.