தலைமுறை தலைமுறையாக தேர் அலங்காரம் செய்து அசத்தும் கலைஞர்கள்
டைட்டில்: தலைமுறை தலைமுறையாக தேர் அலங்காரம் செய்து அசத்தும் கலைஞர்கள் | The chariot has been decorated for generations | Hand-painted adorning the Meenakshi Chokkanathar chariot | Chithirai Festival 2026 | Madurai மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நாளை நடக்கிறது. தேரோட்ட திருவிழாவில் தேரில் உள்ள பொருட்களை அலங்காரம் செய்வது மதுரையைச் சேர்ந்தவர் தேர் அலங்காரக் கலைஞர்கள் என்பது தனிச்சிறப்பாகும். மதுரை தெற்குவெளி வீதி சந்துக்கடையில், அரச வேல் கைவினைத் தொழிலகம் என்ற பெயரில் கோயில் தேர்களுக்கான அலங்காரப் பொருட்களை தயாரிக்கும் அரவிந்த் என்பவர் மீனாட்சி சொக்கநாதர் தேர் அலங்கார பொருட்களை தத்ரூபமாக வடிவமைத்து கொடுத்து வருகிறார். தேர் அலங்காரம் என்பது மதுரையின் தனித்துவமான, பாரம்பரியமானது. மீனாட்சி அம்மன் கோயிலுக்காக, இந்த அலங்கார பொருட்களை பாண்டியர் காலத்தில் இருந்தே இவரது முன்னோர்கள் செய்து வருவது கூடுதல் சிறப்பு. முன்னோர் கட்டிக்காத்த பாரம்பரியத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே, இன்றளவும் அச்சடிக்கும் முறைகளை பயன்படுத்தாமல், கையால் ஓவியம் வரையும் முறையையே தொடர்ந்து பின் பற்றி வருகின்றனர். சுவாமி ஊர்வலத்தில் பயன்படுத்தப்படும் குடைகள், தேர் சீலைகள், பாரம்பரிய வடிவங்களுடன் கட்டப்படும் மாலைகள், சுவாமி கிரீடங்கள், சன்னிதியில் கட்டப்படும் திரைகள் போன்றவற்றை கைகளால் பாரம்பரிய முறைப்படி தயார் செய்து விற்பனை செய்கின்றனர். தற்போது 10 வேலையாட்களுடன் தொடர்ந்து 24 ஆண்டுகளாக இத்தொழிலை செய்து வருகின்றனர். மதுரை மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களில் இவர்களது படைப்புகள் தேர்களை அலங்கரிக்கின்றன. கடந்த 2016 முதல், திருவண்ணாமலை மூலவருக்கான திரை அரவிந்த் தலைமையிலான கலைஞர்கள் செய்து கொடுத்து வருகின்றனர். தமிழ்நாட்டையும் தாண்டி கர்நாடகாவில் உள்ள சிருங்கேரி மடம், ஹைதராபாத், விஜயவாடா உள்ளிட்ட கோயில்களுக்கும் அலங்காரப் பொருட்களை அனுப்பி இருக்கிறோம் என பெருமையுடன் கூறினார். இவர்களின் இந்த பாரம்பரிய படைப்பானது வெளிநாட்டிலும் முத்திரை பதித்துள்ளது மதுரைக்கு கிடைத்த பெருமையாக எண்ணுவதாக தெரிவித்தார். தாய்லாந்து மகா மாரியம்மன் கோயில் திருவிழாவுக்கு, இவர்களிடம் இருந்து தான் அலங்காரப் பொருட்கள் இன்றளவும் அனுப்பி வைக்கப்படுகிறது. அமெரிக்கா, சிங்கப்பூர், மலேஷியா நாடுகளுக்கும் கோயில் மற்றும் தேர் அலங்காரப்பொருட்கள் அனுப்பி வைக்கின்றனர். மற்றவர்களிடம் இருந்து தனித்துவமாக தெரிய, வித்தியாசமான கலைநயமும், தரமான பொருட்களும் கொண்டு உருவாக்கும் போது, வாடிக்கையாளர்கள் திருப்தி அடைவர். எந்த தொழிலிலும் வாடிக்கையாளர்கள் திருப்தியடைந்தால், மீண்டும் மீண்டும் தேடி வருவர் என தெரிவித்தார்.