பாரம்பரிய வீட்டில் குடும்பமாக பொங்கல் வைத்து கோலாகலம் | Family Pongal Festival
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நெற்குப்பை கிராமத்தில் ராம.சா.ராம குடும்பத்தினர் ஆண்டு தோறும் பொங்கல் விழாவை பாரம்பரிய வீட்டில் வைத்து தொடர்ந்து 3 நாட்கள் வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்தாண்டு பொங்கலையொட்டி அமெரிக்கா, கனடா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் வசிக்கும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மும்பை பெங்களூர் மற்றும் கோவை, திருச்சி, சென்னை உள்ளிட்ட நகரங்கள் வசிக்கும் 27 குடும்ப உறுப்பினர்கள் என மொத்தம் 75 பேர் ஒருங்கிணைந்தனர். சொந்த ஊரான நெற்குப்பையில் உள்ள பாரம்பரிய வீட்டில் ஒன்று கூடினர். தாத்தா, பாட்டி, பேரன், பேத்தி என அனைவரும் ஒரே கலரில் பாரம்பரிய வேட்டி சட்டை அணிந்தனர். வீட்டின் முற்றத்தில் வண்ண கோலமிட்டு வீடு முழுவதும் கரும்புகள் மற்றும் மஞ்சள் செடிகளை தோரணமாக அலங்கரித்து வீட்டை அழகுபடுத்தினர். விறகு அடுப்பு வைத்து புதிய பொங்கல் பானையில் அரிசி கோலமிட்டு அறுவடை செய்த நெல் மூலம் பொங்கலோ பொங்கலோ என குலவையிட்டு பொங்கல் வைத்து சங்கு ஊதி வழிபட்டனர். பொங்கல் விழாவுக்கு ஒன்று கூடும் இவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாரம்பரிய விளையாட்டுகளை கற்றுத் தருகின்றனர். குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். 27 குடும்பங்களைச் சேர்ந்த ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட 75 பேர் நெற்குப்பை கிராமத்தில் பாரம்பரிய பூர்வீக வீட்டில் தமிழர் திருநாள் பொங்கல் விழாவை பொங்கல் வைத்து சிறப்பாக கொண்டாடினர்.