அரசு ஊழியர்கள் பலத்தை காட்ட சூளுரை | Govt employees in boiling
பழனிசாமி முதல்வராக இருந்தபோது தி.மு.க. தன் போராளி அமைப்புகள் வாயிலாக ஏகப்பட்ட போராட்டங்களை தூண்டிவிட்டது. அவர்களில் டாஸ்மாக் போராட்ட பிரபல கோவன் போன்றோர் தி.மு.க. ஆட்சி அமைந்த பின் காணாமல் போயினர். ஆனால் டாஸ்மாக் காணாமல் போகவில்லை. தனது வருவாயை பன்மடங்கு அதிகரித்து அரசுக்கு அள்ளி அள்ளி கொடுத்து வருகிறது. அதே போல் அரசு ஊழியர்களை துாண்டிவிட்டும் போராட்டங்களை கிளறியது தி.மு.க. அதில் சில போராட்டங்களில் அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலினே பங்கேற்று தி.மு.க., ஆட்சி அமைந்ததும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உத்தரவாதம் கொடுத்தார். தனது 2021 தேர்தல் பிரசாரத்திலும் அதையே திரும்ப திரும்ப சொல்லி அரசு ஊழியர்கள் உட்பட பலரையும் நம்ப வைத்தார். தி.மு.க. ஆட்சி அமைந்து மூன்றாண்டுகளை கடந்து வுிட்டது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், டாக்டர்கள் டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு ஊழியர்களின் பிரச்னைகளும் காணாமல் போகவில்லை. ஆனால் டாஸ்மாக் கோவன் காணாமல் போனது போல அரசு ஊழியர்கள் காணாமல் போகவில்லை. இதுவரை எந்த அரசும் கண்டிராத எண்ணிக்கையில், அரசு மற்றும் பொது துறை ஊழியர்களின் போராட்டங்களை கடந்த 2023ல் தி.மு.க., அரசு கண்டது. அரசு, பொது துறை மற்றும் கூட்டுறவு ஊழியர்களுக்கென பல்வேறு சங்கங்கள் உள்ளன. ஒவ்வொரு சங்கமும் வெவ்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராடுகின்றன.