IRCTC ஏற்பாடு | Karthik Temple Pilgrimage Train | Madurai
இந்தியன் ரயில்வே ஐ.ஆர்.சி.டி.சி. சுற்றுலா பிரிவு சார்பில் ஆன்மிக யாத்திரை செல்லும் பயணிகள் நலன் கருதி பாரத் கவுரவ் எக்ஸ்பிரஸ் சிறப்பு சுற்றுலா ரயில்கள் இயக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக கேதார் - பத்ரி - கார்த்திக் சுவாமி கோயில் யாத்திரை செல்லும் பாரத் கவுரவ் எக்ஸ்பிரஸ் சிறப்பு சுற்றுலா ரயில் மதுரை கூடல்நகர் ஸ்டேஷனில் இருந்து வியாழன் மாலை ரிஷிகேஷிற்கு புறப்பட்டது. வியாழன் மாலை 6.15 மணிக்கு துவங்கிய இப்பயணம் திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், சென்னை வழியாக ஜூன் 23ம் தேதி காலை 7.10 மணிக்கு ரிஷிகேஷ் சென்றடைகிறது. 14 பெட்டிகள் கொண்ட இச்சிறப்பு ரயிலில் மொத்தம் 170 பயணிகள் செல்கின்றனர். ரிஷிகேஷ், ருத்ரபிரயாக், குப்தாகாஷி, கேதர்நாத், ஜோஷிமாத், பத்ரிநாத் ஆகிய புனித தலங்கள் இப்பயணத்தில் இடம் பெறுகின்றன. முழுவதும் குளிர்சாதன பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் பயணிகளுக்கு தினமும் மூன்று வேளை இலவச சைவ உணவு வழங்கப்படும். இதுகுறித்து இந்தியன் ரயில்வே தென்மண்டல குழு பொது மேலாளர் ராஜலிங்கம் பாசு கூறுகையில், ஐ.ஆர்.சி.டி.சி. மற்றும் உத்தரகண்ட் மாநில சுற்றுலா வாரியம் இணைந்து பாரத் கவுரவ் என்ற சிறப்பு ரயிலை ஏற்பாடு செய்துள்ளது. மதுரையில் இருந்து 70 பேர் இப்பயணத்தில் பங்கேற்றனர் என்றார். உத்தரகண்ட் சுற்றுலா வளர்ச்சி வாரிய சி.இ.ஓ. சச்சின் குர்வே கூறுகையில், ஏற்கனவே இரண்டு ஆன்மிக சுற்றுலா ரயில்களை அறிமுகப்படுத்தினோம். அதற்கு சுற்றுலாபயணிகள் வரவேற்பு அளித்ததை தொடர்ந்து இந்த கேதார் - பத்ரி - கார்த்திக் ரயில் இயக்கப்படுகிறது. உத்தரகண்டில் அதிகம் அறிமுகம் இல்லாத இடங்களுக்கு நாடு முழுவதில் இருந்தும் சுற்றுலா பயணிகளை அழைத்து வருவதே இதன் நோக்கம். சுற்றுலா துறையின் இந்த முயற்சி இந்திய அளவில் முதன்மையானது என கூறலாம் என்றார்.