200 ஆண்டு பழமையான மதுரை கே.புதுார் லுார்து அன்னை ஆலயம்
200 ஆண்டு பழமையான மதுரை கே.புதுார் லுார்து அன்னை ஆலயம் | Dedication Ceremony | Our Lady Of Lourdes | K.Pudur Church | Special Prayer | Mass Opening | Madurai மதுரை கே.புதுார் லுார்தன்னை சர்ச் 200வது ஆண்டு அர்ச்சிப்பு பெருவிழா ஆர்ச் பிஷப் அந்தோணிசாமி சவரிமுத்து தலைமையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலியுடன் துவங்கியது. கே.புதுாரில் 1920ல் தொடங்கப்பட்டு 200 ஆண்டுகளைக் கடந்த சர்ச் தற்போது மீண்டும் புதிதாக புனரமைக்கப்பட்டது. கடந்த 2023ல் புதிய சர்ச் எழுப்ப முன்னாள் ஆர்ச் பிஷப் அந்தோணி பாப்புசாமி அடிக்கல் நாட்டினார். தற்போது பணிகள் முழுமையாக நிறைவு பெற்றுள்ளது. பழைய ஆலயத்தில் 3 கோபுரங்களில் 3 சொரூபங்கள் நிறுவப்பட்டு இருந்தன. தற்போது புதிய ஆலயத்தில் லூர்து மாதா, சூசையப்பர், அந்தோணியார், வேளாங்கண்ணி மாதா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட புனிதர்களின் சொரூபங்கள் நிறுவப்பட்டு உள்ளது. பிரான்ஸ் நாட்டின் லூர்து நகரில் உள்ள புதுமைக்கல், லூர்து அன்னையின் பீடத்தில் பதிக்கப்பட்டு, சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இந்த அர்ச்சிப்பு விழாவிற்கு திருச்சி சலேசிய மறை மாநில தலைவர் தாஸ் கென்னடி, முன்னாள் திருச்சி சலேசிய மறை மாநில தலைவர் அகிலன் சர்பரசாதம், பங்கு தந்தை ஜார்ஜ், உதவி பங்கு தந்தையர்கள் பாக்கியராஜ், பிரபு அஜிலாஸ், ஜேப்பிசன் மற்றும் சலேசியர்கள், மறைமாவட்ட குருக்கள், துறவியர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், சென்னை, பெங்களுரு, சிவகங்கை, தேனி, விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பங்குகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பாதயாத்திரையாக வந்து லூர்து அன்னையின் ஆசி பெற்றனர்.