இயற்கை பொருட்களால் வண்ணம் தயாரித்து கண்களுக்கு விருந்து படைக்கும் ‛குறும்பா'
இயற்கை பொருட்களால் வண்ணம் தயாரித்து கண்களுக்கு விருந்து படைக்கும் ‛குறும்பா / Madurai / Kurumba tribal paintings / Making colors from natural materials மதுரை காமராஜர் சாலை வி.எஸ். செல்லம் நுாற்றாண்டு ஹாலில் அன்றில் சித்திரை கூடம் செயல்படுகிறது. இங்கு மரபு ஓவியங்களை மையப்படுத்தி அதனை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக குறும்பா பழங்குடி இன மக்களின் வாழ்வியலை சொல்லக்கூடிய குறும்பா இன ஓவியம் வரைதல் மற்றும் அதனை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பயிற்சி முகாம் தொடங்கப்பட்டது. குறும்பா பழங்குடியின ஓவியர் பாலசுப்ரமணியம் இங்கு பயிற்சி பெரும் பயிற்சியாளர்களுக்கு குறும்பா ஓவியங்களை நேர்த்தியாகவும், தத்ரூபமாகவும் வரைய கற்றுக்கொடுக்கிறார். இயற்கையில் கிடைக்கக்கூடிய வேங்கை மரம், இலை, பட்டை, கும்மோதிரக்காய் மற்றும் செம்மண் பயன்படுத்தி இயற்கை முறையில் பெயிண்ட் தயாரித்து ஓவியம் வரைகின்றனர். 3000 ஆண்டுகளுக்கு மேலாக மேற்கு தொடர்ச்சி மலையில் வாழ்ந்து வரும் குறும்பர் பழங்குடியின மக்களின் வாழ்வியலை வெளிக் கொண்டு வர இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இன்று முதல் வரும் 23 ம் தேதி வரை 4 நாள் பயிற்சி முகாமில் மாணவர்களுக்கு குறும்பர் இன மக்களின் வாழ்வியல் மற்றும் அவர்களின் தொழில், விவசாயம், பொழுதுபோக்கு, சடங்குகள், போன்ற நிகழ்வுகளை சேவைக் கட்டணத்துடன் ஓவியமாக வரைந்து கற்பிக்கப்படும். தற்போது குரும்பர் இன மக்கள் தமிழகத்தில் 1000 பேர் மட்டுமே உள்ளனர். குரும்பர் இன ஓவியங்கள் அழிவின் விழிம்பில் உள்ளதால் அதனை மீட்டெடுத்து பொதுமக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதே இவர்களின் லட்சியமாக உள்ளது.