நடந்தது என்ன? மதுரையில் பரபரப்பு சம்பவம் | cyber crime police at Madurai Aadeenam Math
நடந்தது என்ன? மதுரையில் பரபரப்பு சம்பவம் / cyber crime police at Madurai Aadeenam Math கடந்த மே மாதம் 2ம் தேதி சென்னை காட்டாங்கொளத்தூரில் நடைபெற்ற சைவ சித்தாந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மதுரை ஆதீனம் காரில் சென்றார். உளுந்தூர்பேட்டை ரோட்டில் சென்ற ஆதீனம் கார் மீது மற்றொரு கார் மோதி விபத்து நடந்தது. தன்னை சிலர் கார் ஏற்றிக் கொலை செய்ய முயன்றதாக மதுரை ஆதீனம் குற்றம் சுமத்தினார். அங்கிருந்த சிசிடிவி காட்சியை போலீசார் வெளியிட்டு தவறான தகவல்களை மதுரை ஆதீனம் கூறுவதாக அறிக்கை வெளியிட்டனர். தவறான தகவல் பரப்பி மதமோதலை தூண்டும் வகையில் பேசிய மதுரை ஆதீனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வக்கீல் ராஜேந்திரன் என்பவர் சென்னை கிழக்கு மண்டல சைபர் க்ரைம் போலீசில் புகார் கூறினார். தொடர்ந்து ஆதீனம் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் ஆதீனத்திற்கு நிபந்தனையின் பேரில் முன்ஜாமின் கிடைத்தது. போலீசார் ஆதீனம் மடம் சென்று விசாரணை செய்ய கோர்ட் அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து சென்னை சைபர் க்ரைம் போலீசார் இன்று மதுரை ஆதீனம் மடத்திற்கு சென்றனர். மடத்திற்குள் ஆதீனம் வக்கீல் ராமசாமி மெய்யப்பன் மற்றும் பாஜ வழக்கறிஞர்கள் இருந்தனர். மடத்தின் முன்பு பாஜக மாவட்ட தலைவர் மாரி சக்கரவர்த்தி மற்றும் நிர்வாகிகள் திரண்டனர். இதுகுறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டன அறிக்கை வெளியிட்டார். அதில் மத குருமார்களையும், ஆன்மிகப் பெரியோர்களையும் ஸ்டாலின் அரசு பல்வேறு இன்னல்களுக்கு உட்படுத்தி வருகிறது. இந்த ஆட்சியில் தனி மனிதனைப் போலவே, மடாதிபதிகளுக்கும், சமயப் பெரியோர்களுக்கும் பாதுகாப்பற்ற சூழலே நிலவி வருகிறது. விசாரணை என்ற பெயரில் போலீசாரை வைத்து மதுரை ஆதீனத்தை தொந்தரவு செய்து வருகிறார்கள் என அந்த அறிக்கையில் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆதீனம் மடத்தில் இருந்து தனிநபர்கள் மற்றும் பக்தர்களை போலீசார் வெளியேற்றினர். ஆதீனம் மடத்தில் போலீசார் புகுந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது.