சர்வதேச அளவில் மானாமதுரை மண்பாண்டம் ஃபேமஸ் | Manamadurai Pottery Famous | Manamadurai | Sivagangai
சர்வதேச அளவில் மானாமதுரை மண்பாண்டம் ஃபேமஸ் / Manamadurai Pottery Famous / Manamadurai / Sivagangai மண்ணும் பொன்னாகும் என்ற பழமொழிக்கேற்ப சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மண்ணால் தயாரிக்கக்கூடிய மண்பாண்ட பொருட்கள் உலகளவில் மிகவும் பிரசித்தி பெற்று வருகிறது. இங்கு மண்பாண்டம் பொருட்கள் உற்பத்தியில் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சீசனுக்கு ஏற்ப மண்பாண்டங்களை தயார் செய்கின்றனர். பொங்கல் பானைகள், 100 வகையான திருக்கார்த்திகை விளக்குகள் இங்கு தயாரிக்கப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியின் போது 10 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை களி மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஆயிரக்கணக்கில் தயார் செய்து தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அனுப்புவது வழக்கம். வரும் அக்டோபர் 17ம் தேதி துவங்க உள்ள நவராத்திரி விழாவிற்காக சுவாமி சிலைகள், திருப்பதி பிரம்மோற்சவம் சிலைகள், ஆண்டாள் பொம்மைகள், அத்தி வரதர், அர்த்த நாரீஸ்வரர், சங்கரநாராயணன், அழகர் சுவாமி, மீனாட்சி சுந்தரரேஸ்வரர் சிலைகள், தலைவர்கள், தியாகிகள், பறவைகள், விலங்குகள் மற்றும் கொலுபொம்மைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பொம்மைகள் அனைத்தும் சுற்றுப்புறசூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் வர்ணங்கள் பூசி அழகாகவும், நேர்த்தியாகவும் தயார் செய்யப்பட்டு மானாமதுரை மண்பாண்டகூட்டுறவு சங்கத்தில் விற்பனைக்கு வைக்கப்படுகிறது. இதனை தமிழகம் மற்றும் வெளிமாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து வாங்கி தங்களது வீடுகளிலும் கோயில்களிலும் கொலு வைத்து வழிபடுகின்றனர். தமிழர்களின் பண்டிகைகள் மற்றும் விழாக்களில் மானாமதுரை மண்பாண்ட பொருட்கள் பங்கு வகிப்பதை தொடர்ந்து கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இத்தனை சிறப்பு வாய்ந்த மானாமதுரை மண்பாண்ட பொருட்களை சமையலுக்கு பொதுமக்கள் பயன்படுத்தும்போது, கெமிக்கல் ரியாக்சன் இல்லாமல், உணவுகள் ருசியாகவும், தரமாகவும், உடல் நலத்திற்கு அதிக நன்மையும் கிடைக்கிறது. தற்போது பெரும்பாலான ஓட்டல்களில் மண்பாண்ட சமையல் பிரபலமாகி வருவதால் ஏராளமானோர் வீடுகளிலும் மண்பாண்ட சமையலுக்கு மாறியுள்ளனர்.