புளியோதரை பிரசாதம் ₹ 4.40 கோடிக்கு விற்பனை | Quality Offerings | Meenakshi Amman Temple | Madurai
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தினமும் நாடு முழுவதும் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பல ஆயிரம் பேர் தரிசனம் செய்ய வருகின்றனர். அதிகாலை 5 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும் கோயில் நடை திறந்து இருக்கும். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர். கோயிலுக்குள் எந்த பொருட்களும் எடுத்து செல்ல அனுமதி இல்லை. இதனால் கோயிலுக்குள் உள்ள பிரசாத ஸ்டால்களில் பொங்கல், புளியோதரை, அப்பம், வடை, முறுக்கு, லட்டு உள்ளிட்ட பிரசாதங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இவை அனைத்தும் தலா 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 2 புளியோதரை சாப்பிட்டால் போதும் காலை டிபனை முடித்து விடலாம். வெறும் 20 ரூபாயில் பக்தர்களின் பசியை போக்கும் அட்சய பாத்திரமாக கோயில் பிரசாதம் தரமாக, சுத்தமாக, சுகாதாரமாக வழங்கப்பட்டு வருகிறது. சராசரியாக தினமும் 12 ஆயிரத்து 200 அளவுக்கு புளியோதரை மட்டும் விற்பனை ஆகிறது. ஆண்டுக்கு 4 கோடியே 39 லட்சத்து இரண்டாயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. பக்தர்கள் விருப்பத்தை தொடர்ந்து கூடுதலாக பிரசாதங்களை தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. சமையலுக்கு தரமான எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய் மீண்டும் பயன்படுத்துவதில்லை. அவை சமையல் அல்லாத பயோ எரிவாயு உள்ளிட்ட மாற்று திட்டப் பணிகளுக்கு அனுப்பப்படுகிறது. மீனாட்சி அம்மன் கோயில் பிரசாதம் பக்தர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது.