4 மாத சம்பளம் நிலுவை | Sanitation workers are not salary | TN
தமிழகம் முழுவதிலும் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையில் துாய்மைப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு மாத சம்பளம் 1000 ரூபாய். தினமும் 3 மணி நேரம் பள்ளிகளில் துாய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். கஷ்டப்படும் துாய்மைப் பணியாளர்களுக்கு மாத சம்பளம் என்பது எட்டாக்கனியாக உள்ளது. கடந்த 2024 ம் ஆண்டு ஜூன் முதல் அக்டோபர் வரை 5 மாத சம்பளம் வழங்கவில்லை. பாதிக்கப்பட்ட துாய்மைப் பணியாளர்கள் பல கட்டப் போராட்டங்களை நடத்தினர். அதைத் தொடர்ந்து 2024 ம் ஆண்டு ஜூன் முதல் ஆகஸ்ட் வரை 3 மாத சம்பளம் தலா 3000 ரூபாய் வழங்கப்பட்டது. அதன் பின் 2025 செப்டம்பர் முதல் டிசம்பர் வரை 4 மாத சம்பளம் வழங்கவில்லை. பொங்கல் வருவதையொட்டி கையில் அரை காசுமில்லை; கடன் கொடுப்பார் யாருமில்லை என துாய்மைப் பணியாளர்கள் தங்களின் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் கஷ்ட ஜீவனம் நடத்தி வருகின்றனர். துாய்மைப் பணியாளர்களுக்கு மாத சம்பளம் வெறும் 1000 ரூபாய் கூட வழங்க முடியாமல் அரசின் கஜானா காலியாகி விட்டதா அல்லது அரசு நிதி திவாலாகி விட்டதாக என்ற கேள்வி எழுந்துள்ளது.