கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் ஓயாது என எச்சரிக்கை | sanitation workers strike | madurai
கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் ஓயாது என எச்சரிக்கை / sanitation workers strike / madurai மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பணிகளில் தனியார் மயத்தை புகுத்தும் அரசாணை 152 மற்றும் 139-ஐ ரத்து செய்ய வேண்டும். சுகாதாரம் மற்றும் பொறியியல் பிரிவு பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் அரசாணைப்படி மாதம் தோறும் 26 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். அனைத்து பிரிவு பணியாளர்களுக்கு தீபாவளி போனசாக ஒரு மாத சம்பளம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே கடந்த ஜூன் 29, 30 மற்றும் ஜூலை 1 ஆகிய 3 நாட்கள் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஒப்புக்கொண்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அவர் லேண்ட் (our land) தனியார் ஒப்பந்த நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும். பழிவாங்கும் அதிகாரிகளை வெளியேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து மதுரை மாநகராட்சி கமிஷனர், நகர் நல அலுவலர் மற்றும் உதவி நகர் நல அலுவலர் உள்ளிட்டோர் நான்கு முறை பேச்சு வார்த்தை நடத்தினர். எனினும் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி வளாகத்தில் சமைத்து நேற்று நள்ளிரவிலும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி கமிஷனர் தலைமையில் துணை கமிஷனர், நகர் அலுவலர் ஆகியோர் ஆலோசனை நடத்திய பின்னர் கோரிக்கைகளில் சிலவற்றை குறித்து கடிதம் மூலமாக தூய்மைப் பணியாளர்களிடம் விளக்கம் அளிக்கப்பட்டது ஆனால் இதுபோன்ற விளக்கத்தை ஏற்க முடியாது எனக் கூறி தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் இரவிலும் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர் இரவிலும் செல்போன் வெளிச்சத்தில் சமைத்து உணவு உண்டு போராட்டத்தை தொடர்ந்தனர். அவர்களை போலீசார் கலைந்து போகும்படி எச்சரிக்கை செய்தனர். எனினும் தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை காத்திருப்பு போராட்டம் தொடரும் எனக்கூறி போராட்டத்தை தொடர்ந்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தரத்தரவென இழுத்துச் சென்று வலுக்கட்டாயமாக கைது செய்தனர் நள்ளிரவு கைது செய்யப்பட்டவர்களை விடுவித்தனர். இன்று இரண்டாவது நாளாக மதுரை அவுட் போஸ்ட் அம்பேத்கர் சிலை அருகே ஆயிரக்கணக்கான தூய்மை பணியாளர்கள் மீண்டும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாநகராட்சி, தொழிலாளர் துறை மற்றும் துாய்மை பணியாளர்கள் சார்பில் முத்தரப்பு பேச்சு வார்த்தைக்கு மாநகராட்சி அழைப்பு விடுத்தது. அதை ஏற்று போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.