சதுரகிரி மலையில் பக்தர்கள் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என குற்றச்சாட்டு
சதுரகிரி மலையில் பக்தர்கள் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என குற்றச்சாட்டு |There is no medical facility in Sathuragiri மதுரை மாவட்டம் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் பிரசித்தி பெற்றது. சித்தர்கள் வாழும் மலையாக போற்றப்படுகிறது. கோயில் அடிவாரம் மற்றும் மலைப்பகுதியில் போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால் மலையேறும் பக்தர்கள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் அதிர்ச்சி சம்பவங்கள் தொடர்கிறது. இக்கோயிலுக்கு உள்ளூர் பக்தர்கள் அதிகளவில் செல்கின்றனர். தற்போது வெளி மாநில மற்றும் வெளிநாட்டு பக்தர்களும் அதிகளவு தரிசனம் செய்ய வருகின்றனர். அமாவாசை, பௌர்ணமியையொட்டி முதல் நான்கு நாட்கள் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதில்லை. தை மற்றும் ஆடி அமாவாசை தவிர மற்ற மாதங்களில் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். அடிவாரம், மலை வழிப்பாதைகளில் மருத்துவக் குழுவினர் இருப்பதில்லை. மலையேறும் போது மாரடைப்புக்கு உள்ளாகும் பக்தர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க முடியாமல் இறப்புக்கு ஆளாகின்றனர். சிவராத்திரி மற்றும் அமாவாசையையொட்டி மலையேறிய சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்த ஒருவர் மற்றும் தஞ்சையை சேர்ந்த ஒருவர் என இரு பக்தர்கள் என அடுத்தடுத்து மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த துயர சம்பவம் நடந்தேறியது.