அப்துல்ரசாக் உள்ளங்கையில் 58 அறிவியல் கண்டுபிடிப்புகள்
அப்துல்ரசாக் உள்ளங்கையில் 58 அறிவியல் கண்டுபிடிப்புகள் / Madurai scientist Abdul Rashak / invents digital device in cooker / Madurai மதுரை பீ.பீ. குளம் நபிகள் நாயகம் தெருவை சேர்ந்தவர் அப்துல்ரசாக். வயது 47. எலக்ட்ரீசியனான இவர், சிறிய வீட்டில் மனைவி, குழந்தைகளுடன் வசித்து வருகிறார். ஏழாம் வகுப்பு வரை படித்தார். படிப்பை தொடர வறுமை இடம் கொடுக்கவில்லை. வாழ்க்கையில் எதாவது சாதனை செய்ய வேண்டும் என்ற ஊக்கம் அவரது ஆழ்மனதில் துாண்டுகோலாக இருந்து வந்தது. இதன் பயனாக கோவை விஞ்ஞானி ஜி.டி. நாயுடு போல் சிறு சிறு அறிவியல் கண்டுபிடிப்புக்களை கண்டுபிடித்து மதுரையின் ஜி.டி. நாயுடு என பெயரெடுத்தார். இவரது கண்டுபிடிப்புக்களில் சாதம் வடிக்கும் பாத்திரம் முக்கிய இடம் வகிக்கிறது. அதாவது சாதம் வெந்தவுடன் கீழே உள்ள பைப்பை திறந்தால் போதும் சாதத்தின் சூடான நீர் வெளியேறி விடும். இதுதான் அப்துல் ரசாக்கின் முதல் கண்டுபிடிப்பு. இதை எளிமையான முறையில் உபயோகிக்கலாம் என்கிறார் அப்துல் ரசாக். அடுத்தது ஆட்டோ, டூவிலர் டயர் திருடுபோவதை தடுக்க 200 ரூபாயில் சேஃப்டி லாக் ஒன்றை கண்டுபிடித்தார். இது என்னவென்றால் டயரின் மேற்பரப்பில் உள்ள நட்டுகள் கழட்டுவதற்கு எளிதாக இருக்கும். அதனால்தான் டயர்கள் எளிதாக திருடு போகிறது. இந்த சேஃப்டி லாக் அதன் மேல் தட்டை அடைத்துவிடும். எந்த சாவி போட்டாலும் திறக்க முடியாது. அதுபோல் மொபைல் போனுடன் கூடிய சார்ஜர் என எத்தனையோ கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரரானார் அப்துல்ரசாக். முதல் கண்டுபிடிப்பிற்காக அப்போதைய ஜனாதிபதி பிரதிபா பாட்டீலிடம் தேசிய விருது பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்தார். விருது வாங்க டில்லி சென்றபோது 5 நாட்கள் தங்கியிருந்தார். அப்போது கடும் குளிர் அவரை வாட்டியது. அதை நினைவில் கொண்டு எல்லையில் உள்ள ராணுவ வீரர்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள் என உணர்ந்து ஊர் திரும்பியவுடன் ‛பனி கோட் ஒன்றை குறைந்த செலவில் கண்டுபிடித்தார். அதுமட்டுமில்லாமல் டபுள் டக்கர் மின்விசிறி, மின்விசிறியில் லைட் எரிய வைத்தல் போன்ற அசத்தலுடன் பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்தார். தற்போது சமைக்கும்போது குக்கரின் விசில் சத்தத்தை எண்ண முடியாமல் போகும் தருணங்களில் உணவு வீணாவது குடும்பங்களில் அடிக்கடி நடக்கும் வழக்கமான ஒன்று. இதைத் தவிர்க்க ஒவ்வொரு விசில் சத்தத்தையும் கணக்கிடும் டிஜிட்டல் நம்பர் கருவியை கண்டுபிடித்து அசத்தியுள்ளார் அப்துல்ரசாக். குக்கரில் சோறு, குழம்பு, காய்கறி, அசைவம் என எதை வேக வைத்தாலும், விசில் சத்தத்துடன் டிஜிட்டல் டைமரில் அது எத்தனையாவது விசில் என்பதை அறிந்து அதற்கேற்ப அடுப்பை அணைத்துவிட முடியும் வகையில் கண்டுபிடிப்பு ஒன்றை நிகழ்த்தியுள்ளார். அடுத்தகட்டமாக டைமர் செட் செய்துவிட்டு, குக்கரும், அடுப்பும் தானாகவே அணைந்துவிடும் வகையிலான முறையை தற்போது ஆய்வு செய்து வருகிறார். மதுரையில் தனியார் பள்ளியில் அறிவியல் கண்டுபிடிப்பு ஆசான மாணவர்களுக்கு அறிவியல் கண்டுபிடிப்புக்களை கற்றுத் தருகிறார். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களை இளம் அறிவியல் மேதைகளாக உருவாக்கியுள்ளார். இம்மாணவர்கள் புதிய அறிவியல் கண்டுபிடிப்புக்களில் நிகழ்த்தி வருவது குறிப்பிடத்தக்கது. பள்ளிக்கூடம் போகாத படிக்காத அறிவியல் மேதை அப்துல்ரசாக் கண்டுபிடிப்புகள் மேலும் தொடர வாழ்த்தலாம். குறைந்த செலவிலான அப்துல்ரசாக் கண்டுபிடிப்புக்களை அங்கீகரித்து வணிக ரீதியில் பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.