மதுரையில் நடந்த இரண்டு மெகா மாநாடுகள் கற்றுத்தந்த பாடம் என்ன?
மதுரையில் நடந்த இரண்டு மெகா மாநாடுகள் கற்றுத்தந்த பாடம் என்ன? / Muruga Pakthargal Manadu / TVK Maanila Maanadu / Hindu Munnani / TVK / Madurai மதுரை வண்டியூர் டோல்கேட் அருகே உள்ள மைதானத்தில் ஹிந்து முன்னணி சார்பில் கடந்த ஜூன் 22 ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட ஹிந்து அமைப்பினர் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். இம்மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். முருக பக்தர்கள் மாநாடு நடந்து முடிந்த இரண்டு மாத இடைவெளியில் மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் விஜய் ரசிகர்கள், கட்சி நிர்வாகிகள் என லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். இம்மாநாட்டில் விஜய் எனும் சிங்கிள் மேன் மட்டுமே கோலோச்சினார். அவருக்காக மட்டுமே கூட்டம் கூடியது. சுட்டெரிக்கும் 102 டிகிரி வெயிலை தாக்குப்பிடிக்க முடியாமல் மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் 250 க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இடப்பற்றாக்குறை காரணமாக மாநாட்டிற்கு வெளியிலும் தொண்டர்கள் விஜயை காண பல மணி நேரம் காத்திருந்தனர். மாநாட்டு திடலில் ஸ்பீக்கர் பாக்ஸ், ஹைமாஸ் விளக்கு, பனை மரம் உள்ளிட்டவற்றில் ஏறி தொண்டர்கள் ஹாயாக உட்கார்ந்து கொண்டனர். வெயிலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் மாநாட்டு திடலில் தரை விரிப்புக்களை வெட்டி சுருட்டி எடுத்து மேற்கூரையாக பயன்படுத்தினர். சிலர் தரை விரிப்புக்களை வெட்டி எடுத்து வீட்டிற்கு கொண்டு சென்றனர். மாநாட்டு ஏற்பாட்டாளர்களால் சாலையோர கடைகள் வாடகை அடிப்படையில் விடப்பட்டதாக கூறப்பட்டது. ஒரே ஒரு நாள் வியாபாரம் தான் என்பதால் உணவு பொருட்களின் விலை இஷ்டத்துக்கு உயர்த்தி கொள்ளையடித்தனர். தரம் இல்லாத, சுவை இல்லாத தண்ணீர் நிரம்பிய கம்பங் கூழ் முதல் வாட்டர் பாட்டில் வரை விலை உயர்வு விண்ணை எட்டியது. வேறு வழியின்றி தொண்டர்கள் கூடுதல் விலை கொடுத்து வாட்டர் பாட்டில்களை வாங்கும் அவலத்திற்கு தள்ளப்பட்டனர். பெண்களுக்கான டாய்லெட் இருந்தது. ஆனால் அதில் தண்ணீர் வரவில்லை. டாய்லெட்டிற்குள் பழைய கழிவு பொருட்களை போட்டு அடைத்து வைத்திருந்தனர். இதனால் மூதாட்டிகள், பெண்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மாநாடு திடல் முழுவதும் காலியான வாட்டர் பிளாஸ்டிக் பாட்டில்கள், வாட்டர் பாக்கெட்டுகள், கூல் டிரிங்க்ஸ் எம்டி பாட்டில்கள் மலை போல் குவிந்து கிடந்தன. மாநாட்டு திடல் அருகே டோல்கேட்டில் மாநாட்டுக்கு வந்த வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படவில்லை. எனினும் சிலர் டோல்கேட் தடுப்பு வேலிகளை வாகனத்தில் இடித்து தள்ளி விட்டு ‛தளபதி விஜய் என கோஷம் போட்டு வேகமாக சென்றனர். தொண்டர்களின் அட்ராசிட்டியை பார்த்து டோல்கேட் ஊழியர்கள் மற்றும் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். பாரபத்தி அருகே உள்ள ஆவியூர் டாஸ்மாக் மதுக்கடையில் சரக்கு வாங்க கூட்டம் அலைமோதியது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சிலர் மது பாட்டில்களை மொத்தமாக கொள்முதல் செய்து வாகனங்களில் கொண்டு வந்து குடித்தனர். போதையில் நடுரோட்டில் வாகனங்களை மறித்து குத்தாட்டம் போட்டு தொண்டர்கள் சிலர் பட்டையை கிளப்பினர். விஜய் ரேம்ப்வாக் சென்றபோது பாதுகாப்பு தடுப்பு வேலிகளை தாண்டிக் குதித்து தொண்டர்கள் விஜயிடம் நெருங்கினர். அவர்களை பவுன்சர்கள் எனும் பாதுகாப்பு வீரர்கள் குண்டுக்கட்டாகத் துாக்கி வெளியேற்றினர். மாநாடு முடிந்ததும் போர்க்களம் போல் மாநாடு திடல் அலங்கோலமாக காட்சியளித்தது. சேர்கள், தரை விரிப்புகள், தடுப்புக்கள் நாலா திசையிலும் சிதறிக் கிடந்தன. மாநாட்டு திடலை விட்டு வெளியேறிய வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக செல்லாமல் இஷ்டத்துக்கு சென்றதால் டிராஃபிக் ஜாம் ஆனது. இதனால் நான்கு வழிச்சாயைில் பல கிலோ மீட்டர் துாரம் வெளியூர் செல்லும் வாகனங்கள் அணி வகுத்து நின்றன. ஒரு கிலோ மீட்டர் துாரத்தைக் கடக்க ஒரு மணி நேரம் ஆனது. மாநாட்டு திடலில் அத்துமீறிய தொண்டர்களை விஜய் எச்சரிக்கை செய்யவில்லை. பனை மரத்தில் ஏறி உட்கார்ந்திருப்பவர் உடனே கீழே இறங்கவும். பாதுகாப்பான இடத்தில் அமரவும் என விஜய் சொல்லியிருந்தால் விதிமீறலில் ஈடுபட்டோர் கேட்டிருப்பர். ஆனால் விஜய் எதுவும் சொல்லாமல் அவரவர் போக்கிற்கு விட்டு விட்டார். இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதுவும் ஏற்படவில்லை. பாதுகாப்பு ஏற்பாடுகளில் கோட்டை விட்டதால் கட் அவுட் வைக்கும் போது விருதுநகர் இளைஞர் ஒருவர் உயர் அழுத்த மின்சாரம் தாக்கி ஸ்பாட்டிலேயே இறந்தார். சென்னையை சேர்ந்த தவெக நிர்வாகி ஒருவர் மாநாட்டிற்கு வரும் வழியில் மதுரை சக்கிமங்கலம் பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த இரண்டு இறப்பு சம்பவங்கள் தொடர்பாக மாநாட்டில் இரங்கல் தெரிவிக்கவில்லை. விஜய்காக உயிரையே கொடுத்த இருவர் இறுதி சடங்கில் விஜயோ அல்லது கட்சி நிர்வாகிகளோ கலந்து கொள்ளவில்லை. மாநாட்டு திடலில் 100 அடி கட்சிக்கொடிரம் விழுந்ததில் இன்னோவா கார் நொறுங்கியது. நல்ல வேளையாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. அப்பளம் போல் கார் நொறுங்கி கிடப்பதைப் பார்த்து கார் உரிமையாளர் தேம்பி தேம்பி அழுதது தான் மிச்சம். இப்படி ஏட்டிக்கு போட்டியாக தமிழக வெற்றிக் கழகம் மாநாடு நடந்து முடிந்தது. அதேநேரம் மதுரை வண்டியூர் டோல்கேட் அருகே நடந்த முருக பக்தர்கள் மாநாடு நேர்த்தியாகவும், வரன்முறை, விதிமுறைக்கு உட்பட்டு நடந்தது என்றால் அது மிகையாகாது. வெய்க்கில் ஃபெசிலிட்டி, ட்ரிங்கிங் வாட்டர் ஃபெசிலிட்டி, டாய்லெட் ஃபெசிலிட்டி, ரோடு ஃபெசிலிட்டி, குவாலிட்டி ஃபுட் வெசிலிட்டி என அனைத்து ஏற்பாடுகளும் பெர்ஃபெக்ட்டாக இருந்தது. மாநாட்டில் பங்கேற்றவர்கள் தேவையில்லாத கோஷம் போடவில்லை. பனை மரங்களில் ஏறி அமரவில்லை. ஸ்பீக்கர் பாக்ஸ்களை ஆக்கிரமிக்கவில்லை. தரை விரிப்புக்களை ஆட்டையை போடவில்லை. எவ்வித சலசலப்புக்கும் இடம் கொடுக்கவில்லை. சேர்கள் போடப்பட்ட அதே இடத்தில் மாநாடு முடியும் வரை ஒரு இஞ்ச் கூட நகராமல் அதே இடத்தில் இருந்தது ஆச்சரியம் தான். காலியான வாட்டர் பாட்டில்கள் நேரடியாக குப்பைத் தொட்டியை சென்றடைந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகள் பக்காவாக இருந்ததால் காயம், உயிரிழப்பு போன்ற அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. முக்கியமாக மாநாடு நடந்த இடத்திற்கு அருகிலேயே டாஸ்மாக் மதுக்கடைகள் இருந்தன. எனினும், மாநாட்டில் கலந்து கொண்ட ஒருவர் கூட மது போதையில் வரவில்லை. மது இல்லாத மாநாடாக முருக பக்தர்கள் மாநாடு மெய் சிலிர்க்க வைத்தது. அனைத்திற்கும் முத்தாய்ப்பாக மாநாடு முடிந்த கையோடு அந்தந்த வரிசையில் உள்ள சேர்களை அந்தந்த வரிசை பார்வையாளர்கள் அடுக்கி வைத்தனர். குப்பைகளை சேகரித்து குப்பைத் தொட்டியில் போட்டனர். மாநாடு முடிந்ததும், மாநாடு முடிந்த சுவடே தெரியாமல் மாநாட்டு திடல் அழகாகவும், மிடுக்காகவும் தென்பட்டது. அண்ணாதுரை கூறியது போல் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் தாரக மந்திரத்தை திராவிட கட்சிகள் பின்பற்றுகிறதோ இல்லையோ, முருக பக்தர்கள் மாநாட்டில் பின்பற்றப்பட்டது வெட்ட வெளிச்சம். காமராஜர், அண்ணாதுரை, ஈ.வெ.ராமசாமி பெரியார், அம்பேத்கர், வேலுநாச்சியார் மற்றும் அண்ணாதுரை, எம்ஜிஆர். கொள்கை வழியில் தவெக நடப்பதாக கூறும் விஜய், அதை மாநாட்டின் போது செயல்வடில் காட்ட தவறி விட்டார் என்றே பார்க்கப்படுகிறது. ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் என்ற திருவள்ளுவர் குரளோவியம் முருக பக்தர்கள் மாநாட்டில் மெருகோவியமாக பின்பற்றப்பட்டது என்னவோ உண்மை தான்.