கல்வி மற்றும் வாழ்க்கை வழி்காட்டுதலுக்கான நிகழ்வு | Madurai Dinamalar valikati program
கல்வி மற்றும் வாழ்க்கை வழி்காட்டுதலுக்கான நிகழ்வு | Madurai Dinamalar valikati program | Event for Education and Life Guidance பிளஸ் 2 வுக்கு பின் எதிர்காலம் சிறக்க உயர்கல்வியில் என்ன படிக்கலாம், எந்த கல்லூரியை தேர்வு செய்யலாம் என்பதற்கான அறிய ஆலோசனைகளை வாரி வழங்கும் தினமலர் நாளிதழ் மற்றும் கோவை ஸ்ரீகிருஷ்ணா நிறுவனங்கள் இணைந்து வழங்கும் வழிகாட்டி கல்வி திருவிழா நிகழ்ச்சி மதுரை தமுக்கம் மைதானத்தில் இன்று காலை கோலாகலமாக துவங்கியது. கோவை ஸ்ரீ கிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர் சோபியா, கோவை ஸ்ரீ ராமகிருஷ்ண இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர் அலமேலு, கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி கல்வி நிறுவனங்களில் அரங்குகளை கோவை ஸ்ரீ சக்தி இன்ஜினியரிங் கல்லூரி செயலாளர் தீபன் தங்கவேல், கற்பகம் பல்கலை டீன் அமுதா, நாகர்கோவில் அமிர்தா விஸ்வா வித்யா பீடம் முதல்வர் கண்ணன் ஆகியோர் திறந்து வைத்தனர். நிகழ்ச்சி நடக்கும் வளாகத்தில் தமிழகத்தின் முன்னணி கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், வெளிநாட்டு கல்வி ஆலோசனை நிறுவனங்கள் என 100 க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களின் அரங்குகள் அமைந்துள்ளன. அவற்றை பெற்றோர் மற்றும் மாணவர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். தங்களுக்கு தேவையான கல்வி நிறுவனங்களை மகிழ்ச்சியுடன் தேர்வு செய்தனர். ஒவ்வொரு நிறுவனத்திலும் நடத்தப்படும் பாடப்பிரிவுகள் அவற்றிற்கான வேலைவாய்ப்புகள், விண்ணப்பம் முதல் மாணவர் சேர்க்கை வரை அரங்கு பொறுப்பாளர்கள் விளக்கம் அளித்தனர். அனைத்து தகவல்களும் ஒரே இடத்தில் கிடைத்ததால் பெற்றோர் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நல்ல உயர்கல்வி நிறுவனங்களை தேடும் அலைச்சல் குறைந்ததாக மாணவர் பெற்றோர் பெருமிதம் கொண்டனர். கல்வி வாழ்க்கை வழிகாட்டுதலுக்கான தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி இன்றும் நாளையும் இரண்டு நாட்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சி நாளை மாலை நிறைவடைகிறது. அனுமதி இலவசம். இன்றும் நாளையும் இரு தினங்களுக்கு காலை மற்றும் மாலையில் பல்வேறு தலைப்புகளில் அமர்வுகள் நடைபெறுகின்றது. வழிகாட்டி நிகழ்ச்சியின் முதல் நாள் நிகழ்ச்சியில், எதிர்கால தொழில்நுட்பம் குறித்த தலைப்பில் கோவை ஸ்ரீ கிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர் சோபியா, ஐ.ஐ.டி, ஜெ.இ.இ., மற்றும் நீட் தேர்வுகளுக்கான ஆலோசனைகள் குறித்து கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன், பொறியியலில் எதிர்காலம் குறித்து கோவை ஸ்ரீ ராமகிருஷ்ண இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர் அலமேலு, சார்ட்டன்ட் அக்கவுண்டில் எதிர்காலம் குறித்தும் வேலைவாய்ப்புகள் குறித்தும் ஐ.சி.ஏ.ஐ., மத்திய கவுன்சில் உறுப்பினர் ராஜேந்திரகுமார் ஆகியோர் விரிவாக பேசினார்கள். நிகழ்ச்சியை பவர்டு பை பங்களிப்பாக கோவை ஸ்ரீராமகிருஷ்ண கல்வி நிறுவனங்கள், அமிர்தா விஷ்வ வித்யாலயம், திண்டுக்கல் பி.எஸ். இன்ஜினியரிங் கல்லூரி, ஸ்ரீ சக்தி இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் கல்லூரி, கே.எம்.சி.ஹெச் அன்ட் டாக்டர் என்.ஜி.பி., நிறுவனங்கள், கோவை எஸ். என்.எஸ் இன்ஸ்டிடியூஷன்ஸ், கற்பகம் இன்ஸ்டிடியூஷன்ஸ், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் டெக்னாலஜி, தி இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டாண்டு அக் கவுண்டன்ட்ஸ் ஆப் இந்தியா ஆகியன இணைந்து வழங்குகின்றன. தினமலர் சார்பில் நடைபெற்ற இந்த வழிகாட்டு நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.