உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / வெள்ளைப்பன்றி ஆய்வகம் திறந்து லேப்ராஸ்கோபி பயிற்சி

வெள்ளைப்பன்றி ஆய்வகம் திறந்து லேப்ராஸ்கோபி பயிற்சி

வெள்ளைப்பன்றி ஆய்வகம் திறந்து லேப்ராஸ்கோபி பயிற்சி / Laparoscopy training using white pigs / Government Medical College / Madurai இந்தியாவிலேயே முதன்முறையாக மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி முதுகலை அறுவை சிகிச்சை மாணவர்களுக்கு லேப்ராஸ்கோபி பயிற்சி பெற வெள்ளைப்பன்றிகள் ஆய்வகம் திறக்கப்பட்டது. ஏற்கனவே மருத்துவக் கல்லுாரி ஆய்வகங்களில் முயல், எலி, கின்னிப்பன்றிகளை வைத்து பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. தமிழகத்தில் சில தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் வெள்ளைப்பன்றிகளை வைத்து ஆராய்ச்சி செய்யப்படுகிறது. வெள்ளைப்பன்றியின் இதயம், கல்லீரல், குடல், பித்தப்பை, கிட்னி, தைராய்டு என அனைத்தும் மனித உடலுறுப்புகளுடன் ஒத்துப்போகும். பொதுவாக இவ்வாறு ஆராய்ச்சி செய்து பார்ப்பதற்கு மத்திய அரசின் கால் நடை அமைச்சக கமிட்டியிடம் ஒப்புதல் பெற வேண்டும். இரண்டாண்டுகளுக்கு முன் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி ஆய்வகத்தில் வெள்ளைப் பன்றி வைத்து ஆராய்ச்சி செய்வதற்காக அனுமதி கோரப்பட்டது. ஒப்புதல் கிடைத்த நிலையில் ஆய்வகம் திறக்கப்பட்டது. அனைத்து வசதிகளும் செய்யப்பட்ட நிலையில் முதன்முறையாக மதுரை அரசு மருத்துவக் கல்லூரி, வேலம்மாள் மருத்துவக் கல்லுாரிகளின் முதுநிலை அறுவை சிகிச்சை துறையைச் சேர்ந்த 8 மாணவர்கள் பயிற்சித் திட்டத்தில் பங்கேற்றனர். இந்த பாடத்திட்டத்தை மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி டீன் டாக்டர் அருள் சுந்தரேஷ்குமார் துவக்கி வைத்தார். இந்த ஆராய்ச்சிக்காக கோவை வேளாண் பல்கலையில் இருந்து ஆரோக்கியமான தலா 30 கிலோ எடையுள்ள 2 வெள்ளைப்பன்றிகள் வாங்கப்பட்டது. இவற்றுக்கு ஸ்வைன் ப்ளு தடுப்பூசி அளிக்கப்பட்டு நோய் தாக்குதல் இல்லை என்று கால் நடை டாக்டர்கள் சான்றிதழ் பெற்று பன்றிகளை கல்லுாரி ஆய்வகத்திற்கு கொண்டு வந்தனா். இங்கும் ஒருவாரம் வரை தனிமைப்படுத்தி கால் நடை டாக்டர்கள் மூலம் நோய் தாக்குதல் இல்லை என்று உறுதி செய்த பின் அறுவை சிகிச்சை ஆய்வுக்காக மாணவர்களிடம் கொடுத்தனா். முதல்கட்டமாக பன்றியில் குடல்வால் அறுவை சிகிச்சை செய்ய அனுமதி பெற்ற நிலையில் அடுத்ததாக பன்றியின் குடல், கல்லீரல், ரத்தத்தமனி, இதயம், சிறுநீரகம், தைராய்டு என சிக்கலான சிகிச்சை செய்து பழகுவதற்கு ஜூனில் மீண்டும் விண்ணப்பிக்க உள்ளனா்.

மே 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி