ஆம்புலன்சில் வந்து தேர்வு எழுதிய மாற்றுத்திறன் மாணவி
ஆம்புலன்சில் வந்து தேர்வு எழுதிய மாற்றுத்திறன் மாணவி | a differently abled student who came in an ambulance and wrote the exam | pandalur நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே பாட்டவயல் கரும்பன்மூலா பகுதியைச் சேர்ந்தவர் சைனுதின்- சீனத் தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இரண்டு பெண் குழந்தைகளும் எலும்பு சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு எழுந்து நடமாட முடியாத நிலையில் படுக்கையிலேயே இருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் குழந்தைகளின் அனைத்து தேவைகளையும் தாய் மற்றும் தந்தை இணைந்தே செய்து தருகின்றனர். இதில் மூத்த மகள் பாத்திமத்து சுகைலா ப்ளஸ் 2 முடித்துவிட்டு தற்போது வீட்டிலேயே கலைப் பொருட்களை உருவாக்கி வருகிறார். இரண்டாவது மகள் ஜாஸ்மின் வயது 17. இவர் பிதர்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் 1 வணிகவியல் படித்து வருகிறார். ப்ளஸ் 1 பொதுத் தேர்வு துவங்கிய நிலையில் மாணவி ஜாஸ்மின் ஆம்புலன்ஸ் மூலம் தேர்வு கூடத்திற்கு அழைத்து வரப்பட்டார். அங்கு ஆசிரியர்கள் மற்றும் குடும்பத்தினர் இணைந்து மாணவியை தேர்வு அறைக்கு ஸ்ட்ரச்சர் மூலம் அழைத்து சென்றனர். பின்னர் தேர்வு அறையில் உதவியாளர் மூலம் தேர்வு எழுதினார். உடல் முழுவதும் தளர்ந்தாலும் உள்ளம் தளராமல் பொதுத் தேர்வு எழுதிய மாணவி ஜாஸ்மினை ஆசிரியர்கள் பாராட்டினர். மாணவியை அழைத்து வர உதவிய சமூக ஆர்வலர்கள் செபீக், லத்தீப், பாபு, சிகாபு மற்றும் ஆம்புலன்ஸ் வழங்கி உதவிய உள்ளங்களுக்கு மாணவி நன்றி கூறினார்.