நாட்டின் எல்லையில் பணிக்கு செல்லும் 570 அக்னி வீரர்கள் | Agni Warriors are dedicated | Coonoor
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில் கடந்த 2022ம் ஆண்டு முதல் அக்னி வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு பயிற்சி பெறும் அக்னி வீரர்கள் நாட்டின் எல்லை பகுதிகளில் பணியாற்றி வருகின்றனர். தற்போது 4வது குழுவின் 570 அக்னி வீரர்கள், ஒழுக்கம், தொழில்முறை முக்கிய பண்புகளுடன் 31 வார கடுமையான பயிற்சியை முடித்தனர். இந்த அக்னி வீரர்களுக்கான சத்தியப் பிரமாண நிகழ்ச்சி பேரக்ஸ் நாகேஷ் சதுக்கத்தில் நடைபெற்றது. உப்பு உட்கொண்டு, தேசிய கொடி, பகவத் கீதை, பைபிள், குரான் மீது அக்னி வீரர்கள் சத்தியப்பிரமாணம் செய்தனர். சென்டரின் கமாண்டன்ட் பிரிகேடியர் கிருஷ்ணேந்து தாஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு பயிற்சியில் சிறந்து விளங்கிய 11 பேருக்கு பதக்கம் மற்றும் கேடயங்கள் வழங்கினார். இந்த குழுவினர் நாட்டின் எல்லை பகுதிகளில் பணியாற்ற செல்கின்றனர். நிகழ்ச்சியில் பெற்றோர் மற்றும் உறவினர்கள், ராணுவ வீரர்கள், அதிகாரிகள் திரளாக பங்கேற்றனர்.