கருப்புக்கொடி கட்டி கூவமூலா கிராம மக்கள் எதிர்ப்பு | Black flag protest
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே நெல்லியாளம் நகராட்சிக்கு உட்பட்ட கூவமூலா பகுதியில் வாரத்தில் ஒரு நாள் செயல்பட்டு வந்த ரேசன் கடை வாடகை தராததால் கட்டிட உரிமையாளர் கடையை காலி செய்ய கூறினார். இதையடுத்து கிராம பொதுமக்கள் இணைந்து வாடகை செலுத்தி ரேஷன் கடைக்கான அறையை ஒதுக்கினர். அங்கு இன்டர்நெட் வசதி செய்து வட்ட வழங்கல் துறைக்கு கொடுத்தனர். ஆனால் கடையை செயல்படுத்த வட்ட வழங்கல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் 400 குடும்பத்தினர் ரேஷன் வாங்க முடியாமல் சிரமம் அடைகின்றனர். அதேபோல் சாலை, குடிநீர் உள்ளிட்ட வசதிகளும் இங்கில்லை. அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க அரசியல்வாதிகள், அதிகாரிகள் முன்வரவில்லை. கடுப்படைந்த மக்கள் கிராம நுழைவாயில் மற்றும் வீடுகள் தோறும் கருப்புக்கொடி கட்டி அரசியல்வாதிகள் ஓட்டு கேட்டு வர எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. திராவிடமணி தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததால் கருப்புக் கொடிகள் அகற்றப்பட்டன.