கூடலுார் வனக்கோட்டத்தில் புலிகள் கணக்கெடுப்பு பணி | Census of Tigers | Cuddalore
நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக் கோட்டத்திற்கு உட்பட்ட வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பு பணிக்காக கேமராக்கள் பொருத்தும் பணி துவங்கியது. தமிழக வனப்பகுதிகளில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை புலிகள் கணக்கெடுப்பு பணி வனத்துறை மூலம் நடத்தப்பட்டது. இனி ஆண்டு தோறும் கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட கூடலூர், ஓவேலி, தேவாலா, ஜீன்பூல், சேரம்பாடி, பிதர்காடு ஆகிய வனச்சரங்களில் பணியாற்றும் வன ஊழியர்களுக்கு கடந்த வாரம் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் புலிகள் நடமாட்டம் உள்ள 150 இடங்களில் ஆட்டோமேட்டிக் கேமிராக்கள் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. கணக்கெடுப்பு பணி ஒரு மாதம் நடத்தப்படும். பந்தலூர் அருகே பிதர்காடு வனச்சரகத்திற்கு உட்பட்ட ஓர்கடவு வனப்பகுதியில் வனவர் பெலிக்ஸ், வனக்காப்பாளர் ஜெயமோகன், பேட்டை தீர்ப்பு காவலர்கள் குமார் ராஜன், ஜெகன் உள்ளிட்டோர் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டனர். இப்பணி வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு, உதவி வனப் பாதுகாவலர் கருப்பையா ஆகியோர் மேற்பார்வையில் நடக்கிறது. பொதுமக்கள் வனப்பகுதிகளுக்குள் செல்லக்கூடாது. ஆட்டோமேட்டிக் கேமிரா அருகில் செல்வோரின் போட்டோக்கள் கேமராவில் பதிவாகும். எனவே கேமிரா அருகில் யாரும் செல்லக்கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.