பேச்சு வார்த்தை நடத்த வந்த கலெக்டர் திரும்பி சென்றார் | Leopard Attack
நீலகிரி மாவட்டம் பந்தலூர் சுற்றுவட்டார பகுதியில் சுற்றி வந்த ஒரு சிறுத்தை தொடர்ச்சியாக, குடியிருப்பு பகுதிகளில் வளர்ப்பு கால்நடைகளை வேட்டையாடியதுடன், மனிதர்களையும் தாக்கியது. அதில் ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை பலியாகினர். இதனால் சிறுத்தையை பிடிக்க வலியுறுத்தி, கடந்த இரண்டு நாட்களாக கூடலூர் மற்றும் பந்தலூரில் கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டங்கள் நடத்தினர். இந்நிலையில் சிறுத்தை ஒன்று நேற்று மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. ஆனால் அந்த சிறுத்தை மனிதர்களை தாக்கியது தானா, என்பது தங்களுக்கு தெரியாது என்றும், பிடிபட்ட சிறுத்தையை தங்களுக்கு காட்டாமல் வனத்துறையினர் கொண்டு சென்றது தவறு என்று கூறி, பொதுமக்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டு, மரியலை கைவிட மறுத்தனர். கலெக்டர் பேச்சுவார்த்தைக்கு வந்தபோது, அதை உதாசீனப்படுத்தி அவரை திருப்பி அனுப்பினர். எஸ்.பி பேச்சு வார்த்தையில் ஈடுபட முயன்றபோது, அதனையும் போராட்ட குழுவினர் ஏற்க மறுத்தனர். அதனைத் தொடர்ந்து போலீசாரை ஒரு சிலர் தள்ளிவிட முற்பட்டதால், திடீர் பரபரப்பு ஏற்பட்டது . இதையடுத்து போலீசார் பொதுமக்களை கலைந்து செல்ல பலமுறை வலியுறுத்தியும் யாரும் செல்ல மறுத்தனர். அதைத் தொடந்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.