ஒற்றைக்கொம்பன் காட்டு யானை விரட்டக்கோரி மறியல் போராட்டம்
ஒற்றைக்கொம்பன் காட்டு யானை விரட்டக்கோரி மறியல் போராட்டம் / Elephant attack / old leady death / pandalur நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே நெல்லியாளம் டான்டீ சரகம் எண் 4ஐ சேர்ந்தவர் மூதாட்டி லட்சுமி. எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பில் வசித்து வந்தார். இவர் இன்று காலை 7 மணிக்கு வீட்டிற்கு வெளியே வாசலில் பாத்திரங்கள் கழுவ வந்தார். அப்போது வீட்டு வாசலுக்கு வந்த ஒற்றைக்கொம்பன் யானை, அவரை துரத்தியது. மழையின் காரணமாக வழுக்கல் ஏற்பட்டு கீழே விழுந்த மூதாட்டியை யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். யானையிடமிருந்து அரசகுமார், இலக்கியா, குழந்தை ரட்சிதா, பார்வதி, ஜோதி மற்றும் உயிரிழந்த லட்சுமியின் கணவர் பரமசிவம் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக வீட்டிற்கு ஓடி உயிர் தப்பினர். இதில் சிலருக்கு மயக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து யானை தேயிலை தோட்டம் வழியாக அருகில் உள்ள புதருக்குள் சென்றது. சம்பவ இடத்திற்கு தேவாலா டி எஸ் பி ஜெயபாலன், வனச்சரகர்கள் ரவி, அய்யனார், வானவர் சுதீர்குமார் உள்ளிட்டேர் வந்தனர். மூதாட்டி உடலை பிரேத பரிசோதனைக்காக பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வன விலங்குகளிடமிருந்து பொதுமக்களை காப்பாற்ற வேண்டும். வனத்துறைக்கு ஒப்படைக்கப்பட்ட தேயிலை தோட்டம் வனமாக மாறி உள்ள நிலையில் அதனை சுத்தம் செய்ய வேண்டும். யானை வரும் பகுதிகளில் அகழிகள் அமைத்து பாதுகாப்பு ஏற்படுத்தி தரவேண்டும் என வலியுறுத்தி எம். எல். ஏ. ஜெயசீலன் தலைமையில் கொளப்பள்ளி பஜாரில் மறியல் போராட்டம் துவங்கியது. இதற்கு அனைத்து கட்சியினர், பொதுமக்கள், டான்டீ தோட்ட தொழிலாளர்கள் ஆதரவு தெரிவித்து களத்தில் குதித்தனர். வியாபாரிகள் கடைகளை அடைத்து தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். யானை குடியிருப்பு பகுதிகளில் முகாமிட்டுள்ளதால், அதனை விரட்டும் பணியில் னத்துறையினர் ஈடுபட்டனர்.