மேட்டுப்பாளையம் - குன்னுார் இடையே ஆகஸ்ட் 6 வரை மலை ரயில் ரத்து | Hill Train Canceled | Mettupalayam
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை வெளுத்து கட்டுகிறது. நீலகிரி, ஊட்டி, குன்னூர் என பல இடங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் ஆங்காங்கே மரங்கள் வேரோடு சாய்ந்தன. போக்குவரத்து பாதித்தது. ஹில்குரோவ் ஆர்டர்லி பகுதியில் நேற்றிரவு திடீரென மண் சரிவு ஏற்பட்டு மலை ரயில் தண்டவாளம் சேதமடைந்தது. இதனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து வந்த மலை ரயில் பாதியிலேயே நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டது ரயில்வே ஊழியர்கள் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் சீரமைப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் நீலகிரி மாவட்டத்துக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. பயணிகளின் பாதுகாப்பு கருதி வரும் 6ம் தேதி வரை மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே தினசரி இயக்கப்படும் மலை ரயில் மற்றும் சிறப்பு மலை ரயில் சேவை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து வருத்ததுடன் சுற்றுலா பயணிகள் திரும்பி சென்றனர்.