உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / வாழ்வா? சாவா? பீதியில் உறைந்த மக்கள் | Landslide risk in Gudalur

வாழ்வா? சாவா? பீதியில் உறைந்த மக்கள் | Landslide risk in Gudalur

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் கடந்த ஜூன் மாதம் முதல் பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. ஜூன் 27 மற்றும் 28ம் தேதிகளில் பெய்த பலத்த கன மழையால் மேல்கூடலூர், கோக்கால் ஒன்றரை சென்ட் குடியிருப்பு பகுதிகளில் ஆறு வீடுகள் மற்றும் முதியோர் இல்லத்தில் விரிசல் ஏற்பட்டது. கட்டிடங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மண்ணில் புதைந்து வருகிறது. அந்த வீடுகளை காலி செய்துவிட்டு உறவினர்கள் வீடுகளில் தங்கி உள்ளனர். அப்பகுதியை வருவாய்த் துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதையடுத்து நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதி; பொதுமக்கள் நடமாட தடை செய்யப்பட்டுள்ளது என அறிவிப்பு பலகை வைத்து விட்டு சென்றனர். குடியிருப்பை ஒட்டி அரசு மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்காக மண் மற்றும் மரங்கள் அகற்றப்பட்டதால் வீடுகளில் விரிசல் ஏற்பட்டது என அப்பகுதியினர் கருதினர். இதை மறுத்த அதிகாரிகள், புவியியல் துறை ஆய்வுக்குப் பின்பு தான் இதற்கான காரணம் தெரிய வரும் என தெரிவித்தனர். குடியிருப்புகளில் மெகா விரிசல் தொடர்கிறது. பூமியில் கட்டுமானங்கள் புதைந்து வரும்நிலையில் புவியியல் துறை ஆய்வு செய்து, அதற்கான காரணத்தை தெரிவிக்காததால் மக்கள் வாழ்வதா, மண்ணில் புதைந்து சாவதா என தெரியாமல் தினமும் அச்சத்துடன் வசித்து வருகின்றனர். கேரளா வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் அதன் பாதிப்புகளை தொடர்ந்து, இப்பகுதியிலும் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டு விடுமா என்ற அச்சத்தில் கோக்கால் வாழ் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். கடந்த மூன்று நாட்களுக்கு முன் இந்திய நிலத்தியல் ஆய்வு துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு செய்தனர். மருத்துவமனை கட்டட பணிக்காக மண் அகற்றப்பட்டதால், இப்பகுதியில் விரிசல் ஏற்படவில்லை. ஆய்வு குறித்த அறிக்கை மாவட்ட நிர்வாகத்துக்கு வழங்கப்படும் எனக்கூறி விட்டு சென்றனர். அடுத்ததாக இந்திய புவியியல் துறையினர் இப்பகுதியில் நாளை ஆய்வு செய்கின்றனர். ஆய்வுக்குப் பின் விரிசல் ஏற்பட்டதற்கான காரணம்; எதிர்கால பாதிப்புகள் குறித்த விபரம் தெரிய வரும் என வருவாய் அதிகாரிகள் கூறினர்.

ஆக 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை