படுகர், பழங்குடிகள் 2 நாள் கோயிலில் தங்கி தரிசனம் | Matheswaran temple festival
நீலகிரி மாவட்டம் கூடலூர் நந்தட்டியில் உள்ள பழமையான ஸ்ரீமாதேஸ்வரர் கோயில் திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி பூசாரி ஜம்மக்காரர் வீட்டில் குலதெய்வ பூஜை மற்றும் ஸ்ரீமாதேஸ்வரரை வணங்கி சிறப்பு பூஜைகள் செய்தனர். தொடர்ந்து 25ம் தேதி ஜம்மக்காரர் வீட்டிலிருந்து மாதேஸ்வரரின் சில்லானம் ஆபரணங்கள் பழங்குடியினர் செண்டை மேளம் முழங்க ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்து வந்தனர். விழாவையொட்டி பூர்வ குடிகளான படுகர் மற்றும் பழங்குடி மக்கள் இரண்டு நாட்கள் இரவு கோயிலில் தங்கி பாரம்பரிய இசையுடன் நடனமாடி மாதேஸ்வரரை வழிபட்டனர். விடிய விடிய நடந்த சிறப்பு பூஜைகள், படுகர் மற்றும் பழங்குடியினர் பாரம்பரிய இசை நடன நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக நடைபெற்றன. விழாவின் இறுதி நாளான இன்று காலை சிறப்பு பூஜைகளுடன குலதெய்வ ஆபரணங்கள் மேளதாளத்துடன் மீண்டும் ஜம்மாக்காரர் வீட்டுக்கு எடுத்து சென்றதுடன் விழா நிறைவு பெற்றது.