தாமதமாக துவங்கிய ஊட்டி உறைபனி | snow spread | Ooty
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் இறுதி முதல் பிப்ரவரி மாதம் வரை உறைபனி பொழிவு காணப்படும். ஆனால் இந்த ஆண்டு கடந்த சில நாட்களாக புயல் மழையின் காரணமாக உறைபனி பொழிவு தாமதமானது. தற்போது ஊட்டியில் கடந்த இரண்டு நாட்களாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாகவும், இரவு நேரங்களில் குளிரின் தாக்கம் அதிகமாகவும் காணப்படுகிறது. இன்று அதிகாலை முதல் ஊட்டியின் பல்வேறு இடங்களில் உறைப்பனி பொழிவு தென்பட்டது. குறிப்பாக ஊட்டி குதிரை பந்தய மைதானம், காந்தல், அரசு தாவரவியல் பூங்கா, தலை குந்தா ஆகிய பகுதிகளில் கடும் உறை பனிப் பொழிவு காணபட்டது. நீர் நிலைகள், தாழ்வான பகுதிகளை ஒட்டி அமைந்துள்ள பச்சை பசும் புல்வெளிகள் மீது வெள்ளைக் கம்பளம் போர்த்தியது போல் பனி படர்ந்து மினி காஷ்மீர் போல் காட்சியளித்தது. அதேபோல் சாலை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மீது பனிப்படர்ந்து காணப்பட்டதால் வாகனங்களை இயக்க உள்ளூர் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். ஊட்டியில் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் காணப்பட்டாலும் இரவு நேரங்களில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 3 டிகிரி செல்சியல்சாக பதிவாகியுள்ளது. மேலும் அவலாஞ்சி, எமரால்டு உள்ளிட்ட தாழ்வான இடங்களில் ஜீரோ டிகிரி செல்சியஸ் வரையிலும் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இன்னும் வரும் நாட்களில் நகர்ப்புறங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை ஜீரோ டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளது. ஊட்டியில் இன்று பெய்த உறை பணி காரணமாக கடும் குளிர் நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. குளிரிலிருந்து பாதுகாக்க அதிகாலை நேரங்களில் தோட்டத் தொழிலாளர்கள் ஆங்காங்கே தீ மூட்டி காய்ந்து வருகின்றனர். பொதுமக்கள் கம்பளி ஆடைகளை அணிந்து குளிரிலிருந்து தங்களை பாதுகாத்து வருகின்றனர்.