பகவதி அம்மன் கோயில் விஷு விளக்கு திருவிழா | திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே அம்மன்காவு பகுதியில் உள்ள பகவதி அம்மன் கோயில் விஷு விளக்கு திருவிழா கடந்த மாதம் 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து செண்டை மேளம், கோலாட்டம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவின் இறுதி நிகழ்வாக அம்மன் நீராடுதல் மற்றும் அருள் வாக்கு கூறும் நிகழ்ச்சி அதிகாலை தொடங்கியது. இதில் விரதம் இருந்து அம்மன் அருளுடன் சாமி ஆடிய குஞ்ஞன் என்பவர் பக்தர்கள் அம்மனுக்கு வழங்கிய பட்டு மற்றும் தாலி மாலை உள்ளிட்ட காணிக்கைகளை அம்மனுக்கு சமர்பித்தார். பக்தர்கள் வழங்கிய தேங்காயை உடைத்து அருள்வாக்கு கூறி பிரசாதமாக அரிசி மற்றும் புனித நீர் வழங்கினார். கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெற்றது. விழா ஏற்பாடுகளை கோயில் கமிட்டி கன்வீனர் ஹரிதாஸ், தலைவர் ஸ்ரீதரன் நிர்வாகி ஹரிபிரசீந்த் மற்றும் கமிட்டி நிர்வாகிகள், விழா கமிட்டியினர், ஊர் பொதுமக்கள் செய்தனர். விழாவின் இறுதி மூன்று நாட்களில் வயநாடன் செட்டி சமுதாய மக்கள், பழங்குடியின மக்கள் தங்கள் குடும்பங்களுடன் பகல் மற்றும் இரவில் பங்கேற்று அம்மன் அருள் பெற்று சென்றனர்.