முதலிடம் வென்ற அணிக்கு ₹1.25 லட்சம் பரிசு | Traders Day Festival | Pandalur
நீலகிரி மாவட்டம் பந்தலூரில் வியாபாரிகள் சங்கம் சார்பில் வியாபாரிகள் தின விழா நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் ஆண்டனி வரவேற்றார். சங்கத் தலைவர் அஷ்ரப் சுதந்திர கொடி ஏற்றினார். விநாயகா மருத்துவமனை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. தொடர்ந்து மியூசிக் சேர், லெமன் ஸ்பூன், சட்டி உடைத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக புகழ் பெற்ற கேரளா மாநிலத்தை சேர்ந்த எட்டு அணிகள் பங்கேற்ற கயிறு இழுத்தல் போட்டி வெகு சிறப்பாக நடைபெற்றது. இதற்காக அமைக்கப்பட்ட பிரத்தியேக அரங்கத்தில் துவங்கிய போட்டியை நகர மன்றத் தலைவர் சிவகாமி, கமிஷனர் முனியப்பன், சங்கத்தின் மாவட்ட தலைவர் பரூக், மாநில துணைத் தலைவர் தாமஸ் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில் 130 கிலோ எடை பிரிவு கொண்ட வீரர்கள் பங்கேற்று கயிறு இழுத்தனர். மலப்புரத்தை சேர்ந்த மிடில் ஈஸ்ட் அணியினர் முதல் இடத்தை பிடித்து பரிசு கோப்பை மற்றும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு வென்றனர். மஞ்சேரியை சேர்ந்த ரியல் அணியினர் இரண்டாமிடம், கொண்டோட்டி எகெய்ன் அணி மூன்றாமிடம் மற்றும் பிளேக் கோப்ரா அணி நான்காமிடம் வென்றது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் குணசேகரன், அலியார், அப்துல் ரசாக், பாதுஷா, சம்பத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சங்க பொருளாளர் செல்வகுமார் நன்றி கூறினார்.