நிதி ஒதுக்கியும் பாதியில் நிற்கும் வீடுகள்... குடிசையில் தவிக்கும் பனியர் பழங்குடியின மக்கள்
நிதி ஒதுக்கியும் பாதியில் நிற்கும் வீடுகள்... குடிசையில் தவிக்கும் பனியர் பழங்குடியின மக்கள் | Pandalur | Nilgiris பந்தலூர் அருகே எருமாடு பஜாரை ஒட்டியுள்ள சோமரா பழங்குடியின கிராமத்தில், பனியர் சமுதாயத்தைச் சேர்ந்த 5 குடும்பத்தினர் குடிசைகளில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வீட்டு வசதி இல்லாதது குறித்து தினமலரில் படங்களுடன் செய்தி வெளியானது. இதனைத் தொடர்ந்து, கூடலூர் ஊராட்சி ஒன்றியம் மூலம் ரோசம்மா, லீலா, மீனாட்சி, யசோதா ஆகிய குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டில் அரசு தொகுப்பு வீடுகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால், பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் கட்டுமானப் பணிகளை வடமாநில தொழிலாளர்களிடம் ஒப்படைத்துள்ளார். அவர்கள் வீடுகளை தரமற்ற முறையில் கட்டிவிட்டு, பணியை பாதியிலேயே கிடப்பில் போட்டுள்ளனர். இதனால், ஏற்கனவே குடிசைகளில் வசித்து வந்த பழங்குடியின மக்கள் மீண்டும் தார்பாலின், பிளாஸ்டிக் மற்றும் சேலைகளால் அமைக்கப்பட்ட தற்காலிக குடிசைகளில் வசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து சென்றபோதும், இதுவரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை. பாதியில் நிற்கும் வீடுகளின் கட்டுமானப் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.