வீடுகளில் கருப்புக்கொடி கட்டி தேர்தல் புறக்கணிப்பு | Villages without basic facilities
நீலகிரி மாவட்டத்தில் பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் பழங்குடியினர் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் வசிக்கின்றனர். இங்குள்ள கிராமங்களில் அடிப்படை வசதிகள் என்பது எட்டாக் கனியாகவே உள்ளது. மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் மலை கிராமங்களை தொடர்ந்து புறக்கணித்து வருவதால் மக்கள் யாரிடம் சென்று தங்கள் குறைகளை கூறுவது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நெல்லியாளம் நகராட்சியின் 13 வது வார்டுக்கு உட்பட்ட தேவாலா அருகே பிலாமூலா, பணிக்கர் மூலா, புஞ்சமூலா பகுதிகளில் 142 குடும்பங்களை சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் தேவாலா பஜார் பகுதியில் இருந்து தங்கள் கிராமங்களுக்கு செல்ல வனவிலங்குகள் வந்து செல்லும் பாதையில் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்தே செல்ல வேண்டிய அபாயம் உள்ளது. இதில் பகுதி தூரம் சாலை சீரமைக்கப்பட்டுள்ள நிலையில் அதுவரை மட்டுமே ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் வாடகைக்கு வரும். அதற்குப் பிறகு இரண்டு கிலோ மீட்டர் தூரத்தை இவர்கள் நடந்து தான் செல்ல வேண்டும். இப்பகுதி காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட பகுதியாக உள்ளது. சிறுத்தை, யானை போன்ற வனவிலங்குகள் காலை மற்றும் மாலை நேரங்களில் உலாவுகின்றன. இதனால் இவ்வழியாக பள்ளி- கல்லூரி மாணவர்கள் மற்றும் வெளியிடங்களுக்கு வேலைக்கு சென்று திரும்பும் தொழிலாளர்களும் திக் திக் பயத்துடன் சாலையை கடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது இப்படி என்றால் மின் வசதி இல்லாமல் வீடுகளில் மண்ணெண்ணெய் விளக்குகளை பயன்படுத்தி வருகின்றனர். இதில் படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. முதியோர் மற்றும் நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல் மற்றும் சுவாசக் கோளாறு ஏற்பட்டு புகையால் பல்வேறு நோய்களுக்கும் உள்ளாகி வருகின்றனர். இதுதவிர குடிநீர் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தர நெல்லியாளம் நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசு அதிகாரிகள் முன் வரவில்லை. ஆண்ட கட்சி, ஆளும் கட்சி என திராவிட கட்சிகள் தங்களது கிராமங்களை புறக்கணித்து வருவதாக குற்றம் சுமத்துகின்றனர். எனவே கிராம மக்கள் ஒன்றிணைந்து தங்கள் வீடுகளில் கருப்புக் கொடிகளை கட்டி, தங்கள் கிராமத்திற்கு ஓட்டு கேட்டு எந்த அரசியல்வாதிகளும் வரக்கூடாது என்று அறிவித்து கிராம நுழைவாயில் பகுதியில் எச்சரிக்கை பேனர் வைத்துள்ளனர்.