கும்கிகள் விஜய், வசீம் வருகை | Wild elephants are a nuisance | Pandalur
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் கட்டைக் கொம்பன் மற்றும் புல்லட் யானைகள் ஒன்றாக உலா வருகின்றன. பகல் நேரங்களில் குடியிருப்புகளை ஒட்டிய புதர்களில் முகாமிடும் இந்த இரண்டு யானைகளும் மாலை 5 மணிக்கு மேல் ஊருக்குள் புகுந்து விளை பொருட்களை சேதப்படுத்துகின்றன. சத்துணவு கூடங்கள், ரேஷன் கடைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து சமையல் கூடங்களை உடைத்து உணவு பொருட்களை ருசிப்பதை வழக்கமாக கொண்டுள்ளன. இந்நிலையில் சேரம்பாடி சப்பந்தோடு என்ற இடத்தைச் சேர்ந்த குஞ்சு முகமது என்பவரை இந்த இரண்டு யானைகளும் நேற்று அதிகாலை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து யானைகளை அடர்ந்த வனத்திற்குள் விரட்டக்கோரி குடியிருப்பு வாசிகள் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து கும்கி யானைகள் விஜய் மற்றும் வசீம் வரவழைக்கப்பட்டது. இன்று காலை முதல் இந்த இரண்டு யானைகளும் குடியிருப்புகளை ஒட்டிய வனப்பகுதியில் முகமிட்டுள்ள நிலையில் அவற்றை விரட்டும் பணியில் கும்கிகள் ஈடுபட்டு வருகின்றன. இப்பணியில் வனச்சரகர் அய்யனார் மற்றும் வனவர் ஆனந்த் மேற்பார்வையில் வன பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.