பாஜ குடும்பத்தினர் குண்டுகட்டாக துாக்கி அகற்றம் | Sub-Collector leads demolition of BJP leader's
பாஜ குடும்பத்தினர் குண்டுகட்டாக துாக்கி அகற்றம் | Sub-Collector leads demolition of BJP leaders house புதுச்சேரி சேதராப்பட்டு மற்றும் கரசூர் பகுதியில் 749 ஏக்கரில் சிறப்பு பொருளாதாரம் மண்டலம் அமைக்க 2007 ம் ஆண்டு முதல் நிலம் கையகப்படுத்தும் பணி நடக்கிறது. கரசூர் பாஜ பொறுப்பாளர் செல்வராசுக்கு சொந்தமான 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2 ஏக்கர் நிலம் அங்குள்ளது. அந்த நிலத்தை வழங்க மறுத்துவிட்டார். அங்கு கடந்தாண்டு 1,500 சதுர அடியில் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் பங்களா கட்டினார். அப்போது வில்லியனூர் வருவாய் அதிகாரிகள் வீடு கட்ட கூடாது என அவருக்கு நோட்டீஸ் அனுப்பினர். அதையும் மீறி செல்வராசு வீடு கட்டி குடியேறினார். வருவாய் அதிகாரிகள் வீட்டை இடிக்க வரும் போது செல்வராசு மற்றும் மனைவி ஆகியோர் பிரச்சனையில் ஈடுபட்டதால் அப்போது அதிகாரிகள் திரும்பி சென்றனர். தனது வீட்டை இடிக்க கூடாது என முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்களை சந்தித்து செல்வராசு மனு அளித்து வந்தார். இந்நிலையில் வில்லியனூர் சப்-கலெக்டர் சோம சேகர அப்பா ராவ் கொட்டாரு தலைமையில் அதிகாரிகள் குழு 85 பேர் 4 ஜெசிபி இயந்திரங்களுடன் பெரும் போலீஸ் படையுடன் செல்வராசு பங்களாவிற்கு வந்தனர். பங்களாவை இடிக்க எதிர்ப்பு தெரிவித்த செல்வராசு, மனைவி மற்றும் குடும்பத்தினர் 10 பேரை குண்டுக்கட்டாக துாக்கி ஸ்டேஷன் அழைத்து சென்றனர். பங்களாவில் இருந்து பொருட்களை வெளியே எடுத்து வைத்தனர். சற்று நேரத்தில் ஜெசிபி இயந்திரங்கள் மூலம் மடமடவென பங்களாவை இடித்து தரை மட்டமாக்கினர். பாஜ பிரமுகர் செல்வராசு ஆசை ஆசையாய் கட்டிய பங்களா அவரது கண் முன்னே அதிகாரிகள் இடித்து தரைமட்டமாக்கிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.