கொலை வழக்கு ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸ்
கடலூர் மாவட்டம் நெய்வேலி கீழ் வடக்குத்துப் பகுதியைச் சேர்ந்தவர் கோபி மற்றும் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவர்கள் மீது காவல்துறையில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இருவரும் ரவுடி சரித்திரப் குற்றப்பதிவேட்டில் இடம் பெற்றுள்ளனர். கட்டப்பஞ்சாயத்து தொடர்பாக கோபிக்கும், ஆனந்தராஜுக்கும் கடந்த 8 ஆண்டுகளாக முன்விரோதம் இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி நெய்வேலி டாஸ்மாக் மதுக் கடை அருகே ஆனந்தராஜு மற்றும் அவரது நண்பர் நரேஷ் குமார் உள்ளிட்ட ஐந்து பேர் மது அருந்தினர். அப்போது ரவுடி கோபி தனது ஆதரவாளர்கள் 20 பேருடன் சம்பவ இடத்திற்கு வந்து தாக்குதல் நடத்தினார். இரு தரப்புக்கு இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் நரேஷ் குமார் என்பவர் கத்தியால் சரமாரியாக குத்திப் படுகொலை செய்யப்பட்டார். ரவுடி ஆனந்தராஜ் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதுதொடர்பாக நெய்வேலி நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடினர். இன்று காலை நெய்வேலி பகுதியில் பதுங்கி இருந்த ரவுடி கோபியை காவல்துறையினர் பிடிக்க முயன்ற போது தப்பி ஓட முயன்றார். சுதாரித்தப் போலீசார், அவரை கால் முட்டிக்கு கீழே துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். அவரை கடலூர் அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்தனர். ரவுடி சுட்டு பிடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.