RTO ஆபீஸை லஞ்ச ஆபீசாக மாற்றிய கிளார்க் | Bribe | 3 Arrested | RTO Office | Keelakkarai
ராமநாதபுரம் அருகே கீழக்கரை தட்டான் தோப்பு தெருவை சேர்ந்தவர் ரகு. இவர் தனது மனைவி சுதா பெயரில் டாடா பஞ்ச் கார் வாங்கினார். இந்த புதிய காரை ராமநாதபுரம் RTO அலுவலகத்தில் 2024 ஜனவரி 30ல் பதிவு செய்தார். இது நாள் வரை ஆர்.சி புக் வழங்காமல் இழுத்தடித்தனர். இதுகுறித்து ஆர்.டி.ஓ அலுவலக டெஸ்பாட்ச் கிளார்க் செய்யது என்பவரிடம் பல முறை கேட்டும் கொடுக்கவில்லை. ஆர்.சி., புக் வட்டார போக்குவரத்து அலுவலக புரோக்கர் நசீர் என்பவரிடம் உள்ளது. அவரிடம் 2,500 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் உடனடியாக கொடுத்து விடுவார் என்றார். அதுபோல கார் நிறுவன மேலாளர் முருகேசன் என்பவரிடம் கேட்ட போதும் 500 ரூபாய் தள்ளுபடி செய்து 2,000 ரூபாய் கொடுத்தால் ஆர்.சி., புக் கிடைக்கும் என்றார். பணம் கொடுக்க விரும்பாத ரகு ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் அறிவுறுத்தலின் படி கார் நிறுவன மேலாளர் முருகேசனிடம், ரசாயனம் தடவிய 2,000 ரூபாயை, கார் நிறுவனத்தில் வைத்து ரகு கொடுத்த போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக அவரை பிடித்தனர். இதுதொடர்பாக ஆர்.டி.ஓ., அலுவலக டெஸ்பாட்ச் கிளர்க் செய்யது, புரோக்கர் நசீர் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் ஆர்.டி.ஓ. அலுவலகத்தை லஞ்சம் வாங்கும் மையமாக புரோக்கர் நசீருடன் சேர்ந்து செய்யது மாற்றியது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.