அரசு இழப்பீடு வழங்க வலியுறுத்தல் | Kariveppilai cultivation | Attur
சேலம் மாவட்டம் ஆத்துார், தலைவாசல், கெங்கவல்லி, உள்ளிட்ட பகுதிகளில் இரண்டாயிரம் ஏக்கருக்கு மேல் கறிவேப்பிலை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த செப்டம்பர் மாதம் விளைச்சல் கணிசமாக இருந்தது. எனினும் கிலோ 10 முதல் 20 ரூபாய் வரை மட்டுமே விற்பனையானது. கடந்த நவம்பர் முதல் தற்போது வரை பருவ மழை பெய்து வருவதால் கறிவேப்பிலை துளிர் விட்டாலும், சில பகுதிகளில் புள்ளி நோய் தாக்கம் அதிகரித்துள்ளது. நுனி செடியில் பூச்சி தாக்கம் இருப்பதால் வளர்ச்சி குறைந்து விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. தவிர மழைக்கு பின், கடுமையான பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் வளர்ச்சி பாதிக்கப்பட்டு கறிவேப்பிலை கிலோ 50 முதல் 60 ரூபாய் வரை விவசாயத் தோட்டத்தில் வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். இவற்றை தலைவாசல் மார்க்கெட், உழவர் சந்தை மற்றும் வெளி மார்க்கெட்டில் கிலோ 80 ரூபாய்க்கு வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். கறிவேப்பிலை கிலோ 50 முதல் 60 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சராசரியாக கிலோ 40 ரூபாய்க்கு விற்றால் தான் விவசாயிக்கு பாதிப்பு இல்லாமல் இருக்கும். கறிவேப்பிலைக்கு அரசு நிவாரணம் உள்ளிட்ட உதவிகள் வழங்கிட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். சேலம் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் மஞ்சுளா கூறுகையில், தோட்டக்கலை பயிர் பட்டியலில் உள்ள கறிவேப்பிலைக்கு மத்திய, மாநில அரசு திட்டத்தில் சொட்டு நீர் பாசனம், புதிய ரக செடிகள் வழங்கப்படுகிறது. பாதிப்பு பயிர்கள் கண்டறிந்து நிவாரணம் வழங்கப்படும். கறிவேப்பிலை பவுடர் தொழிற்சாலை அமைப்பது தொடர்பான விவசாயிகளின் கோரிக்கையை, மாவட்ட கலெக்டர் மூலம் அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். சேலம் மாவட்டத்தில் மா பயிருக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கறிவேப்பிலை பயிருக்கும் புவிசார் குறியீடு பெறுவதற்கு கள ஆய்வு செய்து, ஆய்வறிக்கை பெற்று, சாத்திய கூறு இருந்தால் அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றார்.